தஞ்சாவூர்: சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2035ஆம் ஆண்டுக்கான தொலைநோக்குப் பார்வை திட்டம் மற்றும் ரூ.60 கோடி மதிப்பில் 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஆராய்ச்சி கூடமான அனுசந்தன் கேந்திராவின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது, “உலக நாடுகள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பொழுது இந்தியா அமைதியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்கும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் உலக அரங்கில் இந்தியா தனி இடத்தைப் பெற்றிருக்கும்.
இதையும் படிங்க: 'திராவிடம்' என்ற சொல் எப்படி வந்தது? - தமிழ்ப் பேராசிரியர் சீனிவாசன் அளித்த வரலாற்று விளக்கம்!
இந்தியாவின் வளர்ச்சி உலக நாடுகளை உற்றுநோக்கச் செய்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி உலக அளவில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கும். இதற்கு அரசு மட்டும் காரணமில்லை, கலாச்சாரமே முக்கிய காரணமாகும். சண்டை ஒருபொழுதும் தீர்வைத் தராது என்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது. உலக அளவில் இந்தியாவின் பொருளாதாரம் தனித்துவமாக உள்ளது. இங்கு 140 கோடி மக்கள் உள்ளனர். உலக அளவில் தங்கம் அதிகளவு இந்தியாவில் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத முன்னேற்றம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதற்கு ஒவ்வொரு குடிமகனின் பங்கும் முக்கியமானது. இதற்கு அடிப்படை அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி அவசியமாகிறது. ஒவ்வொரு மாணவனும் தேசத்தின் சொத்து என்பதை அறிந்திருக்க வேண்டும். 2047ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் இந்தியா முழுமையான வளர்ச்சி பெற்றிட ஒவ்வொருவரும் நாம் நாட்டிற்காக நாம் எவ்வளவு பங்காற்றியுள்ளோம் என்பதை கருத்தில் வைத்திருப்பது அவசியம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்