சென்னை: அண்ணல் அம்பேத்கரின் 69வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பாரதியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "அண்ணல் அம்பேத்கர் தனது வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களைத் தாண்டி சாதனை படைத்துள்ளார். அவருக்கு நடந்த சோதனைகள் வேறு ஒருவரது வாழ்வில் நடந்திருந்தால் அவர்களால் இந்த அளவுக்கு முன்னேறி வந்திருக்க முடியாது. பல வேற்றுமைகளை கொண்ட நமது நாட்டை அவரது அரசியலமைப்பு சட்டம் தான் ஒன்றிணைக்கிறது. அனைவருக்கும் சம உரிமை, சமநீதி எப்போதும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் வாழ்நாள் முழுவதும் போராடியவர்.
பெண்களுக்கு சம உரிமை வழங்கும் சட்டங்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மறுப்பு தெரிவித்ததால் தனது அமைச்சர் பதவிகளை அவர் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து அம்பேத்கர் தேர்தலில் போட்டியிடும் போது அவர் குறித்து பொய்யான அவதூறுகளை பரப்பி அவரை தோற்கடித்தனர். நம் மக்கள் செய்த பெரிய பாவமே அம்பேத்கர் போன்ற சிறந்த மனிதரை தேர்தலில் தோல்வி அடைய வைத்தது தான்.
இங்கு பல அரசியல் கட்சிகள் சமூக நீதி தங்களது கட்சிக்கு சொந்தமானது போல பேசி வருகின்றனர். வெறும் தனிநபர் பயனுக்காகவும், அரசியல் நலனுக்காகவும் மட்டுமே அம்பேத்கரின் பெயரை தற்போது பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அவருடைய பெயரை பயன்படுத்தும் பலர் அவருடைய சிந்தனைகளை பின்பற்றுகிறார்களா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூலை வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்!
சமூக நீதி குறித்து அதிகமாக பேசும் தமிழகத்தில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தொடர்பான செய்திகள் தினமும் வந்து கொண்டுதான் உள்ளது. தலித் ஊராட்சி தலைவர்களுக்கு அலுவலகத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது. பள்ளிகளில் தலித் மாணவர்கள் தனியாக அமர்த்த படுகின்றனர். தலித் வாழும் பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் கழிவுகளை கலப்பது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது.
அந்த வகையில், தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் வரை உயர்த்துள்ளது. அதேபோல் தலித் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளது. ஆனால், இங்கு குற்றங்களில் ஈடுபடுபவர்களில் தண்டனை பெறுபவர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் ஒப்பிடும் போது, தமிழகத்தில் சராசரியை விட குறைவான நபர்களுக்கு தான் தண்டனை வழங்கப்படுகிறது.
சமூக நீதி பற்றி பேசினால் மட்டும் போதாது, அதைக் கடைப்பிடிக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். நமக்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் கடந்தும் அனைவருக்கும் சமநீதி கிடைப்பதில்லை என்பது வேதனை அளிக்கிறது. அரசியல் கட்சிகள் இல்லாமல் பொதுமக்களே தானாக முன்வந்து ஒவ்வொரு தெருவிலும் தீண்டாமையை கடைப்பிடிக்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்க வேண்டும். அதைக் கடைப்பிடித்தால் மட்டுமே நமது நாட்டில் அனைவருக்கும் சமநீதி கிடைப்பதை நம்மால் உறுதி செய்ய முடியும்" என்று தெரிவித்தார்