சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “அச்சகர்கள் எங்களுக்குத் தோள் கொடுக்கும் தோழர்களாகவும், தெய்வத்திற்கு அடுத்த பட்சமாகவும் எங்களுக்குத் தெரிகின்றனர். இந்து கோவில்களில் சாமி தரிசனம் செய்யவும், அன்னதானம் போன்றவற்றை வழங்கவும் தமிழக அரசு சார்பில் எந்தவித அறிக்கையும் யாருக்கும் சொல்லவில்லை, தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.
மறைந்த முதல்வர் கருணாநிதி இல்லத்திற்கு வெளியே உள்ள வேணுகோபால் சுவாமி இல்லத்தில் அயோத்தியில் நடைபெறும் குடமுழுக்கு திருவிழா எல்இடி யாக திரையிடப்பட்டுள்ளது. அதைப் பொதுமக்கள் கண்டு களித்து வருகின்றன. அன்னதானத்திற்கும் எல்இடி திரை அமைப்பதற்கும் நாங்கள் யாரும் தடை சொல்லவில்லை அதற்கு அனுமதி பெற வேண்டும் என்பதே நாங்கள் தெளிவுபடுத்தினோம்.
ஆன்மீகவாதிகளை 100 சதவீதம் துணை நின்று இருக்கும் ஒரு ஆட்சி என்றால் அது திராவிட மாடல் ஆட்சி தான். அரசியல் கலந்த ஆன்மீகத்தை செய்வதற்காக தான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கு இருக்கிறார்” என்றார். பின்னர், அவரிடம் தமிழக ஆளுநர் ரவி சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் கோயில் பூசாரிகள் மற்றும் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது என்று கூறியிருப்பது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, “மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயிலுக்குச் சென்ற ஆளுநருக்குச் சிகப்பு கம்பளம் விரித்து அனைத்து விதமான வரவேற்புடன் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் ஆளுநருக்கு எதை எடுத்தாலும் தெரிகிறது.
தமிழகத்தில் ஏதாவது ஒருவகையில், ஆன்மிகத்துக்கு எதிராக இந்த ஆட்சி இருப்பது போலச் சித்தரிக்க வேண்டும் என்பதற்காக, ஆளுநரும் பாஜகவுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார். மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு உள்ளவர்களிடம் உபயதாரர்கள் நிதியில் செய்தால், உண்டியல் நிதி எங்கே செல்கிறது என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி உள்ளார். உபயதாரர்கள் நிதியில் தான் கோயில் பணிகள் நடைபெறும் உண்டியல் பணத்தில் நடைபெறாது, அடிப்படை கூட தெரியாமல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகிறார்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: “வயித்திலே அடிப்பது”.. அயோத்தி நேரலை எல்இடி திரை அகற்றம் - நிர்மலா சீதாராமன் காட்டம்!