சென்னை: ஆவடியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி ஒரே நேரத்தில் தனது இரண்டு கைகளையும் பயன்படுத்தி எழுதி அசத்துகிறார். இவரது திறமையை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாரட்டியுள்ளனர்.
சென்னையை அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் சிறுமி ஷாஸ்திகா (10). இவர் ஆவடியில் உள்ள அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதலே எழுதுவதில் ஆர்வம் கொண்டுள்ளதாக கூறப்படும் இவர், சமீபகாலமாக தனது இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் எழுதும் திறமையை வளர்த்து கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரு ஊசி ரூ.16 கோடி..அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை - அரசுக்கு பெற்றோர்கள் வேண்டுகோள்!
இந்நிலையில், தற்போது அரசு பள்ளி மாணவி ஷாஸ்திகா, இரண்டு கைகளை பயன்படுத்தி தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் ஒரே வார்த்தையை இரு பக்கமும் எழுதி அசத்தியுள்ளார். வலது கையில் இடமிருந்து வலமாகவும் (சரியாக படிக்கும் படி), இடது கையில் அதே வார்த்தைகளை ஒரே நேரத்தில் வலமிருந்து இடமாகவும் (கண்ணாடியில் பார்த்து படிப்பது போன்று) எழுதியுள்ளார்.
மாணவியின் இத்தகைய திறமையை ஆசிரியகளும், சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். தற்போது மாணவி இரண்டு கைகளை பயன்படுத்தி எழுதும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.