திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் தாமலேரிமுத்தூர் பகுதியைச் சேர்ந்த மோகன் மகன் ஹேமநாத் (18) என்ற இளைஞர், நேற்று (புதன்கிழமை) இரவு இரு சக்கர வாகனத்தில் திருப்பத்தூரில் இருந்து கட்டேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது திம்மம்பேட்டை பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டு இருந்த அரசு பேருந்து தாமலேரிமுத்தூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஹேமநாத் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட ஹேமநாத் கை,கால் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள மருத்துவர்கள் மேல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைக் கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் அரசு பேருந்தை இயக்கியது லோகேஷ் என்ற ஓட்டுநர் என தெரியவந்துள்ளது. அரசு பேருந்து மோதியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது உயிரிழப்பா? தந்தை கூறுவது என்ன?