சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி பேராசிரியர்களாக பணிபுரிபவர்கள், இடையில் ஒய்வு பெற்றாலும் மே 31ஆம் தேதி வரையில் பணியில் இருக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
அரசு கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், முதல்வர்கள், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் ஆகியோரின் பணி நீடிப்பு காலம் மே மாதம் வரை இருந்ததை, ஏப்ரல் மாதமாக குறைப்பதாக உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது.
அதற்கு, தமிழ்நாடு அரசு கல்லூரி பேராசிரியர் கழகம் உள்ளிட்ட, கல்லூரி பேராசிரியர் கூட்டு நடவடிக்கை குழு ஆகியவை அதிருப்தி தெரிவித்தன. இந்த அரசாணை நியாயமற்றது இருப்பதாகவும், தேர்வுப்பணி, தேர்வுத்தாள் மதிப்பீட்டு பணி, நான் முதல்வன் ஆகிய பணிகள் மே மாதம் வரை தொடர்வதாலும், ஏற்கனவே பள்ளி ஆசிரியர்களுக்கு மே மாதம் வரை பணி நீடிப்பு வழங்கப்பட்டிருப்பதாலும், கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஏற்கனவே இருந்ததைப் போல் மே மாதம் வரை பணி நீடிப்பு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
அதனை ஏற்றுக் கொண்டு, திருத்தப்பட்ட அரசாணையை உயர்கல்வித்துறை கடந்த நவம்பர் 12ஆம் தேதி வெளியிட்டது. அந்த அறிவிப்பில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் ஓர் கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் நிலை ஏற்படுவதால் மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படகூடாது. எனவே அந்த பேராசிரியர்கள் வயது முதிர்வு மாதம் ஓய்வு பெற்று, பின் மீண்டும் அக்கல்வி ஆண்டின் இறுதி வரை மறுநியமனம் செய்யும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் வீடு உள்பட 10 இடங்களில் 100 போலீசார் தீவிர சோதனை... ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல நடந்த பணபரிமாற்றம் குறித்து சோதனையா?
இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான பாட வகுப்புகள் ஏப்ரல் முதல் வாரத்துடன் முடிவடைந்து விடுவதாலும், மே மாதத்தில் தேர்வுகள், விடைத்தாள் திருத்தும் பணிகள் மட்டுமே நடைபெறுவதாலும், கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் பேராசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை மறுநியமனம் வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.
கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல்
மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனை கருதி நிர்வாக பதவிகளான கல்லூரி கல்வி இணை இயக்குநர், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், கல்லூரி முதல்வர் மற்றும் இதர கல்விசார்
பணியாளர்களான கல்லூரி நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பதவிகள், நீங்கலாக கல்வி கற்பிக்கும் பேராசிரியர்களுக்கு சில நிபந்தனைகளுக்குட்பட்டு 2025 மே மாதம் 31ஆம் தேதி வரை மறுநியமனம் நீட்டிக்கலாம்” என அந்த அறிவிப்பில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்