கோயம்புத்தூர்: கோவை பீளமேடு செங்காளியப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (67). இவர் இரும்புக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி திருச்சியில் உள்ள மகள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், மனைவி மற்றும் மகளை பார்ப்பதற்காக கடந்த மாதம் 23ஆம் தேதி திருச்சிக்கு மனோகர் சென்றுள்ளார். மேலும், திருச்சிலேயே சில நாட்கள் அவர் தங்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று கோவையில் உள்ள மனோகரின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், உடனடியாக மனோகரனை செல்போனில் தொடர்புகொண்ட அக்கம் பக்கதினர், கதவு உடைக்கப்பட்டிருப்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, உடனடியாக திருச்சியில் இருந்து கோவை வந்த மனோகர், வீட்டில் இருந்த உடைமைகள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், படுக்கை அறைக்குச் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 177 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 9.75 லட்சம் ரொக்கம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் மதிப்பு மொத்தமாக சுமார் 27 லட்சத்து 45 ஆயிரம் என கூறப்படுகிறது. வீட்டில் சில நாட்களாக ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு, இந்த கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மனோகரன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களுடன் சென்று சோதனை மேற்கொண்டனர்.
மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் கொள்ளையர்கள் நடமாட்டம் ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: “நாய்க்கு ஏதும் ஊசி போடனுமா?” - நூதனமாக தம்பி மனைவி கொலை.. 5 பேர் கைதானதன் பின்னணி என்ன?