நாகப்பட்டினம்: பொய்கைநல்லூரில் நள்ளிரவில் காரில் வந்த மர்ம கும்பல் வீட்டில் கட்டப்பட்டிருந்த 4 ஆடுகளை திருடிச் சென்றுள்ள சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக வீடுகளில் கட்டி வைக்கப்பட்டுள்ள ஆடுகளை மர்ம நபர்கள் திருடி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வேளாங்கண்ணி அடுத்த தெற்கு பொய்கை நல்லூரில் வீடுகளில் கட்டப்பட்டிக்கும் ஆடுகளை காரில் வந்த மர்ம கும்பல் திருடிச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதில், தெற்கு பொய்கைநல்லூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் சாலையில், காரில் வந்த மர்ம கும்பல் சாலையில் காரை நிறுத்திவிட்டு, காரிலிருந்து இறங்கிய மூன்று நபர்கள், அருகில் உள்ள வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 4 ஆடுகளை தூக்கி சென்று காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, ஆடு திருடு போனது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆடுகளை திருடிச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காரில் வந்து ஆடுகளை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: நாடாளுமன்ற 5ஆம் கட்ட தேர்தல்; உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் விஐபி வேட்பாளர்கள் முழு விவரம்! - Lok Sabha Election 2024