சென்னை: பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு வருகையை எதிர்த்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் "Go Back Modi" என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டிய திமுக வழக்கறிஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் முடிவுபெறும் தருவாயில் உள்ளது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளன. இதனையடுத்து, வருகிற ஜூன் 1ஆம் தேதி 7வது கட்ட வாக்குப்பதிவும், அதனைத் தொடர்ந்து ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்வதற்காக வருகை தரவுள்ளார். இன்று முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு தியானம் செய்யவிருக்கும் பிரதமர் மோடி, இன்று மாலை 4 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரிக்கு வருகிறார்.
இந்நிலையில் மோடியின் தமிழக வருகையை கண்டித்து திமுக வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் 'Go Back Modi' என போஸ்டர் அடித்து திருவல்லிக்கேணி, பூக்கடை மற்றும் பாரிமுனை போன்ற சென்னையின் முக்கிய பகுதிகள் முழுவதும் ஒட்டியுள்ளார். அதில், "தமிழ் மக்களை இழிவுபடுத்திவிட்டு தமிழ்நாட்டிற்கே வருவதா? இந்திய தேர்தல் ஆணையமே தூங்காதே, Go Back Modi" என்ற வாசகத்துடன் வழக்கறிஞர் தனது புகைப்படத்துடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். இத்தகைய போஸ்டர்கள் தற்போது வைரலாகி வருகிறது.
முன்னதாக, ஒடிசாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பூரிஜெகநாதர் ஆலயத்தில் உள்ள பொக்கிஷங்கள் அடங்கிய அறைகளின் சாவி காணாமல் போயுள்ளது. அவற்றை தமிழ்நாட்டிற்கு கொண்டு சென்றிருக்கலாம் என்று தமிழ்நாட்டு மக்களின் மீது பழியை சுமத்தி, தமிழர்கள் திருடர்கள், களவாணிகள் என்பது போல பேசியுள்ளார் என அரசியல் தலைவர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.. சுற்றுலா பயணிகளுக்கான கட்டுப்பாடு என்ன? - PM Modi Kanyakumari Visit