ஈரோடு: விவசாயம் செழித்து, கிராம மக்கள் நலமுடன் வாழ்வதற்காக, ஒவ்வொரு ஆண்டும் தாளவாடியில் நடைபெறும் சாணியடிக்கும் திருவிழாவை பற்றி கூகுள் மூலம் தெரிந்து கொண்ட ஜெர்மன்,ஹங்கேரி நாட்டு இளைஞர்கள், இந்தாண்டு தாளவாடியில் நடைபெற்ற சாணியடி திருவிழாவில் கலந்து கொண்டது அவ்வூர் மக்களை பூரிப்படையச் செய்துள்ளது.
ஈரோடு மாவட்டம், தமிழக கர்நாடக எல்லையான தாளவாடி குமிட்டாபுரத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கிராம மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.
சாணியடி திருவிழா நோக்கம்?: வனத்தையொட்டி குமிட்டாபுரம் அமைந்துள்ளதால் வனத்தில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகளால் பயிர்ச்சேதம், கால்நடை வேட்டையாடுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்துவதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் வனவிலங்குகளிடமிருந்து தங்களை காக்க பீரேஸ்வரர் அருள் வேண்டி இந்த சாணியடி திருவிழாவை நடத்துகின்றனர்.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை அடுத்த 3 வது நாளில் பீரேஸ்வரர் பிறந்தநாளாக சாணியடி திருவிழா கொண்டாடப்படுவதால், இந்தாண்டு திருவிழாவும் பீரேஸ்வரர் சுவாமிக்கு மலர் அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
இதற்காக கிராமத்தில் உள்ள மாட்டுக்கொட்டைகளில் இருந்து பசுஞ்சாணம் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுவாமி வேடமணிந்த ஒருவரை கழுதை மேல் அமர வைத்து ஊர் எல்லையில் உள்ள குளத்தில் இருந்து ஆரவாரத்துடன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டார். அதைத் தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனையுடன் பூஜைகள் நடத்தப்பட்டது.
சாணத்துக்கு பூஜை: பின்னர், கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டிருந்த சாணத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தி விழாவை தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, சட்டை அணியாமல் சிறியவர் முதல் பெரியவர் வரை, குவித்து வைக்கப்பட்டிருந்த சாணத்தை எடுத்து உருண்டையாக திரட்டி ஒருவர் மீது ஒருவர் வீசி கொண்டாடினர்.
இதற்கிடையே, கூகுள் தேடுதல் பொறி மூலம் இத்திருவிழாவை பார்த்து பரவசமடைந்த ஜெர்மன் மற்றும் ஹங்கேரி நாட்டு இளைஞர்கள் தாளவாடிக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு மாலை அணிந்தும் பொட்டு வைத்தும் ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், திருவிழாவின் போது நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.
உற்சாகமடைந்த வெளிநாட்டவர்கள்: "தங்கள் நாட்டில் இது போன்ற பாரம்பரிய விளையாட்டு இல்லை எனவே இதை பார்க்கும் போது ஆர்வரத்தை தூண்டியது" எனக்கூறியும், இந்த திருவிழாவின் தொடக்கத்திலிருந்து நிகழ்ச்சி முடியும் வரை படம் பிடித்துள்ளனர். இதை, அவர்கள் நாட்டு மக்களுக்கு காண்பிக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதில், தமிழக மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.விழா நிகழ்வுக்கு பின் அனைவரும் ஊர்குளத்தில் நீராடிவிட்டு பீரேஸ்வரரை வழிபட்டனர். சாணியடி திருவிழாவில், பக்தர்கள் வீசியெறிந்து விளையாடிய சாணத்தை கிராமமக்கள் எடுத்துச் சென்று விவசாய நிலங்களில் உரமாக போடுகின்றனர். இதனால் பயிர்களில் நோய் தாக்காது பயிர் நன்றாக வளரும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: "விஜய் படத்திற்கு தினமும் முத்தம் கொடுப்பேன்"- நண்பா, நண்பிகளையே மிஞ்சிய நெல்லை பாட்டி..! ராணுவ கிராமத்தின் பார்வையில் ‘அமரன்’.. என்ன சொல்கிறார்கள் வீரர்கள்? |
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்