சென்னை: சென்னை, எழும்பூர் மியூசியம் திரையரங்கத்தில் ஜெனிசிஸ் சேம்பர் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழு இன்று மாலை இசை நிகழ்ச்சி நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் 50 இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். வயலின், டிரம்ஸ், கிட்டார், கீ போர்டு, டிரம்பெட் போன்ற இசைக்கருவிகள் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
இந்த நிகழ்ச்சிக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.1000, 500, 300 என மூன்று பிரிவுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. முற்றிலும் வெளிநாட்டு இசை நிகழ்ச்சி போல இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கேப்டன் ஹாரிஸ் மோசஸ் கூறுகையில், "இந்த இசை நிகழ்ச்சி மிகவும் வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பங்கேற்கின்றனர்.
இந்த மாதிரியான நிகழ்ச்சியில் எப்பொழுதும் இசையில் ஜாம்பவானாக விளங்குபவர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். ஆனால் நாங்கள் இசையை கற்கக்கூடிய ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் மாணவர்களையும் இந்த மேடையில் இசைக்கருவி வாசிக்க வாய்ப்புகளை கொடுத்துள்ளோம். இது அவர்களுடைய தன்னம்பிக்கையையும் இசை ஆர்வத்தையும் அதிகரிக்கும். பல்வேறு விதமான கருத்துக்களை உள்ளடக்கி இந்த நிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளோம்.
மியூசிக் தீம்: பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன், இஸ்பாலியா இசை போன்ற இசை வகைகளை வாசிக்கப் போகிறார்கள். சென்னையில் இது போன்ற நிகழ்ச்சி நடந்தது இல்லை. இந்த ஆர்கெஸ்ட்ரா கொரோனா காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கும் விதத்தை இவர்கள் கற்றுக் கொடுக்கின்றனர். குறிப்பாக வயலின், மற்றும் வயலினில் இருக்கக்கூடிய பல்வேறு வகைகளை கற்றுக் கொடுக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் வயலின், பேஸ் வயலின், கிளாரினெட், டிரம்பெட், சாக்ஸபோன், பேஸ்கிட்டார், கிளாசிக்கல் கிட்டார், அக்கொஸ்டிக் கிட்டார் , ட்ரம்ஸ் ஆகிய இசைக்கருவிகள் இடம் பெற்றுள்ளன" என்றார்.
பின்னர் பேசிய மியூசிக் டீச்சர் சுதர்சன் பேசுகையில், "நான் இந்த ஆர்கெஸ்ட்ராவில் பியூலா இசைக்கருவி வாசிக்கிறேன். இந்த நிகழ்ச்சியை என் நண்பனின் கீர்த்தன் ஆர்கெஸ்ட்ரா தான் நடத்துகிறது. அவர் இந்த இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஆலோசனை கேட்ட போது கண்டிப்பாக நடத்துங்கள் என்று கூறினேன். அதோடு என்னுடைய மாணவர்களையும் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ஏற்பாடும் செய்தேன்.
தற்போது இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆர்கெஸ்ட்ராவில் வயதானவர்களும், குழந்தைகளும் இருக்கிறார்கள். மூத்தோர்கள் இளையவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் அனைத்துவிதமான இசைகளையும், ராகங்களையும் நாங்கள் வாசிக்கப் போகிறோம்" என்றார்.
இதையும் படிங்க : 38 மொழிகளில் சூர்யாவின் குரல், உச்ச நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சி... 'கங்குவா' பிரமாண்ட அப்டேட்!
பின்னர் ஜோஸ்லின் கூறுகையில், "நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். இந்த நிகழ்ச்சியில் வயலின் வாசிக்க வந்துள்ளேன். நான் இந்த ஆர்கெஸ்ட்ராவில் கலந்து கொள்வதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் பயிற்சிக்கு வரும்போது நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன்.
எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இவ்வளவு பெரியமேடை எனக்கு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பொதுவாக இது வாசிக்கக்கூடிய இசை நிகழ்ச்சி அல்ல. தனித்துவமான ஒரு இசை நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் 'நைட்டின் கேர்ள்' என்ற ஒரு சிறிய பகுதியில் நான் வயலின் வாசிக்கிறேன். நான் மட்டுமின்றி என்னுடைய தம்பியும் இந்த நிகழ்ச்சியில் வயலின் வாசிக்கிறான்" என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்