செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், பெரிய மணியக்கார தெருவைச் சேர்ந்தவர் சதாம். இவர் செங்கல்பட்டு ரயில் நிலையில் தேனீர் வியாபாரம் செய்து வருகின்றார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், தன் மனைவி ரோஜி குத்துன் (28), மகள்கள் ரஜியா பர்வீன் (8), சயாலி (5), மற்றும் மகன் ஆப்தாப் (2) ஆகியோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சதாமின் மனைவி, தனது 3 குழந்தைகளுடன் கடந்த வியாழக்கிழமை செங்கல்பட்டில் ரயில் நிலையம் அருகே வேலை பார்க்கும் தனது கணவரைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்குள் வந்ததும் மின் விளக்கு சுவிட்சை போட்டதும் கேஸ் எரிந்து, தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, 4 பேரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், 3 குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி நேற்று (மார்ச் 1) உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் விபத்து ஏற்பட்ட வீட்டில் ஜன்னல்கள் இல்லாமல் இருப்பதும், அடுப்பு தரையில் வைக்கப்பட்டிருந்ததும் கேஸ் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மாணவன் தற்கொலையில் திடீர் திருப்பம்.. ஓரினச்சேர்க்கையால் ஏற்பட்ட விபரீதம்!