மதுரை: மதுரையை சேர்ந்தவர் கார்த்திக். இவர் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கான ஜிஎஸ்டி வரி பாக்கி செலுத்துவதற்காக பிபி குளத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஜிஎஸ்டி பிரிவில் துணை ஆணையராக இருக்கும் சரவணக்குமாரை அணுகினார்.
அப்போது அவர், ஜிஎஸ் டிவரி பாக்கியில் குறிப்பிட்ட தொகையை குறைப்பதற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை லஞ்சமாகக் கேட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தொகையை கார்த்திக் கொடுக்க விரும்பவில்லை. இதுதொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அளித்த ஆலோசனைப்படி, நேற்று இரவு பிபி குளம் அலுவலகத்தில் வைத்து ரூ.3.50 லட்சத்தை அந்த அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், ராஜ்பீர் ராணா ஆகியோரிடம் வழங்கியுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரி கலைமணி, இன்ஸ்பெக்டர் சரவணன் குழுவினர் கையும் களவுமாக அவர்களை கைது செய்தனர்.இந்த தொகை துணை ஆணையர் சரவணக்குமாருக்காக வாங்கச் சொன்னது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மதுரை ஜிஎஸ்டி அலுவலகத்தில் மூன்று பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: "அம்பேத்கரை அவமதித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்புக் கேட்க வேண்டும்"-எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வலியுறுத்தல்!
இந்த விசாரணையில் கார்த்திக்கிடம் ஜிஎஸ்டி பாக்கியை குறைக்க லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜிஎஸ்டி துணை ஆணையர் சரவணக்குமார், மற்றும் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், ராஜ்பீர் ராணா ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
துணை ஆணையர் வீட்டில் சோதனை: இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் உள்ள துணை ஆணையர் சரவணக்குமாரின் வீட்டில் சோதனை செய்வதற்காக சிபிஐ டிஎஸ்பி தலைமையில் 5 பேர் சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்ததாக தெரிகிறது.
இதனையடுத்து சரவணகுமாரின் மூத்த சகோதரரைத் தொடர்புகொண்ட சிபிஐ அதிகாரிகள், அவர் மூலம் வீட்டைத் திறந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.