திருப்பத்தூர்: வட தமிழகத்தின் ஜீவாதாரமாக இருக்கும் பாலாற்றில், தோல் தொழிற்சாலைகள் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில், பாலாற்று படுக்கைகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவது, ஆம்பூர் மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர் நகராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், தார்வழி பகுதியில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள், மறுசூழற்சி செய்யாமல் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, பச்சகுப்பம் பகுதியில் உள்ள பாலாற்று படுக்கைகளில் கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் சுகாதாரச் சீர்கேடு மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், திருப்பத்தூர் மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆம்பூர் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், பாலாற்றின் படுக்கைகளில் கொட்டப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: உதகை அருகே மண்சரிவு; 6 பெண்கள் உயிரிழப்பு - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!