நெல்லை: கன்னியாகுமரி மாவட்டம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் மருந்தகப் பிரதிநிதியாக இருந்து வருகிறார். இவர் தனது நண்பர்களிடத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாத வாடகைக்கு கார் தேவைப்படுவதாகவும், T போர்டு கார் வாடகைக்கு எடுத்தால் அதிக செலவு ஆவதாக கூறி கார்ப்பரேட் நிறுவனங்கள் சொந்த வாகனங்கள் வைத்திருப்பவரிடம் நாள் வாடகைக்கு கார்களை பெற்று பயன்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தனது நண்பர்கள் மூலம் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோரிடம் சொகுசு கார்களான இன்னோவா கிரிஸ்டா, ஷிப்ட் டிசையர், கிளன்ஸா, டிரைபர் போன்ற பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை பெற்று கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற நபர் மூலம் வாடகைக்கு விட்டு தருவதாக கூறி பெற்றுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக இந்த பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது. முதல் மாத வாடகை பலருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் முதல் 1500 வரை என பேசப்பட்டு வாடகைகளும் கார் உரிமையாளர்களுக்கு வரவு வைக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், கூடுதல் வாகனங்கள் தேவைப்படுவதாக நண்பர்களிடம் ரமேஷ் தெரிவித்ததாகவும் அதன் அடிப்படையில் பலர் வாகனங்களை தானாக முன்வந்து நாள் வாடகைக்கு ரமேஷிடம் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சுமார் 34 நபர்கள் தங்களது கார்களை கொடுத்து வாடகையை பெற்றுள்ளனர். மேலும், இதில் பலர் புதிதாக கார்களை விலை கொடுத்து வாங்கி வாடகைக்கு கொடுத்துள்ளனர். வழக்கமாக வாடகை பத்தாம் தேதி அன்று வரவு வைக்கப்படும். ஆனால், இந்த மாதத்திற்கான தொகை எதுவும் கார் உரிமையாளர்களுக்கு தற்போது வரை கிடைக்காமல் இருந்துள்ளது.
இதனை தொடர்ந்து பல்வேறு வழிகளில் அவர்கள் கார்களை தேட முயற்சித்துள்ளனர். பல கார்களில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ள நிலையில், ஜிபிஎஸ் உதவியுடன் தேடி பார்த்ததில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தங்களது கார் இருப்பதை கண்டறிந்துள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கார் வாடகைக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லி விட்டு கார்கள் நெல்லையில் இருக்கிறதே என ரமேஷிடம் கேட்டுள்ளனர். அதற்கு ரமேஷ், மணிகண்டன் என்பவர் மூலம் கார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அவரிடம் கேட்டு சொல்வதாக கூறி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதனால் குழப்பம் அடைந்து கார்களை கொடுத்த நபர்கள் ஒன்று திரண்டு, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் ஜிபிஎஸ் கருவிகளுடன் இருக்கும் கார்களை தேடிச் சென்றுள்ளனர். பலரிடம் போய் காரை திருப்பி கேட்க முயற்சித்த நிலையில் கார் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியுள்ளது. நாள் வாடகைக்காக கொடுத்த கார்களை அடகு வைத்து பணத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக தற்போது கார்களை வைத்துள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், காருக்காக பணத்தை கொடுத்த நாங்கள் எப்படி உங்களிடம் காரை தர முடியும் நாங்கள் பணம் கொடுத்த நபர்களை வரவழைத்து இது தொடர்பாக பேசிக் கொள்வோம் என கூறி கார்களை தர மறுத்துள்ளனர். நெல்லை மாநகர பகுதிகளில் பெரும்பான்மையான கார் இருப்பதை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்டறிந்த கார் உரிமையாளர்கள் நெல்லை மாநகர காவல் ஆணையாளரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளதுடன் கார்களை வாடகைக்கு பெற்றுக்கொண்ட ரமேசையும் அழைத்து வந்து ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் இது தொடர்பாக விசாரணை நடத்த காவல் ஆணையாளர் அறிவுறுத்தியதன் பேரில் ரமேஷிடம் நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் கார்கள் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் நெல்லை சந்திப்பு காவல் நிலையம் அருகே காத்திருந்த நபர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றும் கிடைத்தது. வாடகைக்கு கொடுத்து காணாமல் போன ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட கார் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தை கடந்து செல்வதை கார் உரிமையாளர் கண்டறிந்துள்ளார். இதனை தொடர்ந்து காணாமல் போன காரை மீட்க கார் உரிமையாளர்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து பின் தொடர்ந்து சென்றனர். கார் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே நின்றிருப்பதை பார்த்ததுடன் காரை ஓட்டி வந்த நபரையும் பிடித்து விசாரித்துள்ளனர். அவர் முறையாக எந்த தகவலையும் தெரிவிக்காத சூழலில் காவல் கட்டுப்பாட்டறைக்கு கார் உரிமையாளர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கார் குறித்து கார் ஓட்டி வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது நண்பர் ஒருவரிடம் இருந்து காரை மருத்துவமனை செல்வதாக கூறி வாங்கி வந்ததாகவும், அவரிடம் இது குறித்த தகவலை தெரிவித்து அவரை வரவழைப்பதாகவும் காரை ஓட்டி வந்த நபர் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கார் உரிமையாளரின் புகாரின் அடிப்படையில் கார் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. காரை ஓட்டி வந்த நபர் மற்றும் கார் வைத்திருக்கும் நபரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல கோடி மதிப்பிலான 34 கார்கள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அதில் ஒரு காரை உரிமையாளர்களின் முயற்சியால் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன பிற கார்களையும் உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் எனவும் போலீசாரிடம் காரை பறிகொடுத்த உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட பல கார்களின் ஜிபிஎஸ் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு வருவதாகவும் கார் உரிமையாளர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 10 தனிப்படை அமைத்தும் முடியல.. ஜெயக்குமார் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு