சென்னை: சென்னையில் இருந்து திருப்பதி சென்ற சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில், ஜூலை 1ஆம் தேதி சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் சென்றுள்ளனர். மறுபுறம், சென்னையில் இருந்து திருத்தணி சென்ற மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சென்ற மின்சார ரயில் ஆவடி – அண்ணனூர் இடையே சிக்னலுக்காக நின்றுள்ளது. அப்போது இதைக் கண்ட மாநிலக் கல்லூரி மாணவர்கள் சிலர், ரயிலில் உள்ள அவசரகால சங்கிலியை இழுத்து சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தியுள்ளனர்.
இதன் பின்பு, ரயிலில் இருந்து கீழே இறங்கி தண்டவாளத்தில் கிடந்த ஜல்லி கற்களை எடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது வீசியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மின்சார ரயிலில் பயணித்த பயணிகள், ரயிலின் ஜன்னல் மற்றும் கதவுகளை அடைத்துக் கொண்டுள்ளனர். மேலும், கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ரயில் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளது.
மேலும், இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதுமட்டுமல்லாது, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆவடி ரயில்வே போலீசார், பொதுமக்கள் எடுத்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இத்தகைய சூழலில், மோதலில் ஈடுபட்ட அரக்கோணத்தைச் சேர்ந்த ஐயப்பன் (20), ஜெகன் (18), திருத்தணியைச் சேர்ந்த சரத் (19), வல்லரசு (19) ஆகிய 4 பேரை ஆவடி ரயில்வே போலீசார் நேற்று கைது செய்து, அவர்களிடம் இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மாணவர்கள் நடத்திய தாக்குதல் குறித்த செல்போன் வீடியோக்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், முகத்தை மூடிக்கொண்டு மாணவர்கள் கும்பலாக விரைவு ரயில் இருந்து இறங்கி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணித்த ரயில் மீது கற்களை வீசி தாக்குவதும், பொதுமக்கள் பயத்தில் ஜன்னல்களை மூடுவதும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சாலையில் நடந்து சென்ற சிறுமியை கடிக்க பாய்ந்த நாய்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சி!