திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் அணை அருகே திரைப்பட நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி ஐந்து ஏக்கர் விவசாய நிலம் வாங்கி அதில் விவசாயம் செய்ய ஏற்பாடு செய்து வருவதாக தெரிகிறது.
சமுத்திரக்கனியின் இந்த ஐந்து ஏக்கர் விவசாய நிலத்தை ராமு என்பவர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில், நிலத்தை உழ வைத்திருந்த பவர் டில்லர் இயந்திரத்தை (Power Tiller Machine) இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக நிலத்தை பாதுகாத்துவரும் ராமு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு (ஜூலை 11) செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட செங்கம் காவல் நிலைய போலீசார் பவர் டில்லரை அதே பகுதியைச் சேர்ந்த அருள் மற்றும் விஜயா என்பவர்களின் உதவியோடு திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், செல்வகுமார் ஆகிய இருவரும் டாட்டா ஏசி வாகனம் எடுத்து வந்து திருடிச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மங்கலம் பகுதிக்கு விரைந்து சென்ற செங்கம் போலீசார் மணிகண்டன் மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து பின்னர் ஊர் கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த அருள் மற்றும் விஜயா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதனைஅடுத்து, விவசாய நிலத்தில் இருந்து பவர் டில்லர் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் செங்கம் போலீசார், செங்கம் நீதிமன்ற நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தி, அதன் பின்னர் குற்றவாளிகளை செங்கம் மற்றும் வேலூர் சிறைச்சாலையில் 15 நாட்களுக்கு காவலில் அடைத்தனர்.
இதுமட்டும் அல்லாது, போலீசார் விசாரணையில் மணிகண்டன் என்ற நபர் கடந்த 2018 ஆம் ஆண்டு பணத்திற்காக 5 வயதுக் குழந்தையை கடத்தி கொன்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நபர் என தெரியவந்துள்ளது. சமுத்திரக்கனியின் விவசாய நிலத்தில் இருந்து பவர் டில்லர் இயந்திரத்தை திருடிய வழக்கில் ஒரு பெண் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “ஆவினில் பால் உற்பத்தியாளர்களுக்கு நிரந்தர விலை கொடுக்கப்படும்”