செங்கல்பட்டு: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அருகே புக்கத்துறை கூட்ரோடு பகுதியில், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி பழுதாகி நடுரோட்டிலேயே நின்றுள்ளது.
இந்நிலையில் திருச்சியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து புக்கத்துறை கூட்ரோடு அருகே வந்தபோது, பழுதாகி நின்றிருந்த லாரியின் வலதுபுறத்தில் பலமாக மோதியது. தொடர்ந்து பின்னால் வந்த அரசு பேருந்து ஆம்னி பேருந்து மீது மோதியது.
அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் தொடர்ந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த நான்கு பயணிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 15-க்கும் மேற்பட்டோரை மீட்ட அப்பகுதியினர் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த படாளம் போலீசார், செங்கல்பட்டு தீயணைப்பு துறையினரின் உதவியுடன் ஆம்னி பேருந்தில் சிக்கிக்கொண்ட நான்கு பேரின் உடல்களை மீட்டனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இறந்தவர்கள், ஆம்னி பேருந்தில் இறந்த மேல்மருவத்தூர் அடுத்த அகலியை சேர்ந்த மருத்துவர் ராஜேஷ் (30), சென்னை கொடுங்கையூரை சேர்ந்த தனலட்சுமி (60), சென்னையை சேர்ந்த பிரவீன் மற்றும் மற்றொரு பெண் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்து காரணமாக, சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதேபோல் நேற்று அதிகாலையும் மதுராந்தகம் அருகே கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஷ்ய ஆதரவு ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு: என்ன காரணம்? உலக தலைவர்கள் கண்டனம்!