தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட மேல்மங்கலம் கள்ளுக்கட்டு பகுதியில், சார்பு ஆய்வாளர் முருகப்பெருமாள் உள்ளிட்ட காவலர்கள் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டு வாகன தணிக்கை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அப்போது பெரியகுளம் நோக்கிச் சென்ற ஆட்டோவை சோதனை செய்த பொழுது, ஆட்டோவில் இருந்தவர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் காவல்துறையினர் முழுமையாக ஆட்டோவை சோதனை செய்ததில், இரண்டு நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து ஆயுதங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், அதனைக் கொண்டு வந்த ஜெயமங்களம் காந்திநகர் காலனியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ், வீரனேஸ்வரன், பிரகதீஷ், பிரபு ஆகிய 4 நபர்களையும் ஜெயமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கைதான 4 நபர்களிடமும் கியூ பிரிவு காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாள் உடன் வந்தவர்கள் யாரையும் பழி தீர்க்க வந்தார்களா அல்லது கூலிப்படையாக செயல்படுகிறார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
இதையும் படிங்க: “எந்த ஒரு குடுத்தல் வாங்கலும் கிடையாது”.. நெல்லை ஜெயக்குமார் விவகாரத்தில் ரூபி மனோகரன் விளக்கம்! - MLA Ruby Manoharan