சென்னை: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் நிலையில், போதை பொருட்களுக்கு எதிராக காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சூழலில், சென்னையில் மெத்தபெட்டமைன் என்ற போதை பவுடர் விற்பனையும் தலை தூக்கியுள்ளது. அண்மையில், இது தொடர்பாக பல கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை தொடந்து பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், மடிப்பாக்கத்தில் கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்களுக்கு கொகைன், மெத்தபெட்டமைன் விற்பனை செய்த நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 23 கிராம் கொக்கைன், 4 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் தங்கி கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக பரங்கிமலை துணை ஆணையர் செல்வ நாகரத்தினத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையும் படிங்க: உடற்கல்வி ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ! பள்ளி முதல்வரும் கைதானது ஏன்?
அதன் பேரில், உதவி ஆய்வாளர் தலைமையிலான துணை ஆணையரின் தனிப்படை போலீசார் மடிப்பாக்கம் பகுதியில் வீட்டில் தங்கியிருந்த டிஜே தொழில் செய்யும் பிரதீப்(27), என்பவரை கைது செய்து விசாரித்த போது, குழுவாக சேர்ந்து வடசென்னையில் இருந்து போதைப்பொருள் வாங்கி வந்து கல்லூரி மாணவர், ஐடி ஊழியர்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
அவர் கொடுத்த தகவலின் பேரில் ஆதம்பாக்கத்தை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (23), வேளச்சேரியை சேர்ந்த அஸ்வின் (24), வில்லிவாக்கத்தை சேர்ந்த ஷாபுதீன் (24) ஆகிய மூன்று பேர் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 23 கிராம் கொக்கைன், 4 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு மடிப்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு சென்னை கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த டிவி நடிகை மீனா தனது நண்பருடன் சேர்ந்து மெத்தப் பெட்டமைன் போதைப் பொருளை வாங்கி விற்பனை செய்து வருவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், மீனாவிடம் 5 கிராம் மெத்தப்பெட்டமைன் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்