தஞ்சாவூர்: தமிழ்நாடு பூந்தாட்ட கழகம் மற்றும் தஞ்சை மாவட்ட பூந்தாட்ட கழகத்துடன் இணைந்து, திமுகவின் தஞ்சை வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், 43வது மாநில அளவிலான பூந்தாட்டப்போட்டி (ball badminton) கும்பகோணம் அருகேயுள்ள திருவாவடுதுறை ஆதீன மேனிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 68 அணிகளைச் சேர்ந்த 1,200 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் மாணவியர் பிரிவில் மதுரை முதலிடமும், சேலம் 2ஆம் இடமும் பெற்றது. அதேபோல் மாணவர் பிரிவில் திருச்சி முதலிடமும், விருதுநகர் 2ஆம் இடமும் பெற்றது. இதனையடுத்து, வெற்றி பெற்றவர்களான பரிசளிப்பு இன்று நடைபெற்றது.
மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்ற விழாவில், போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார்.
இதனையடுத்து விழா மேடையில் அவர் பேசியதாவது, “சென்னையில் நடைபெற்று வரும் ஃபார்முலா 4 கார் பந்தயம் என்பது மிகப்பெரிய சாதனை. அடுத்த முறை ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அப்படி இந்தியாவில் நடத்த முடிவு செய்தால், அதனை தமிழகத்தில் நடத்த வேண்டும்.
காரணம், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்பாட்டால் கேலோ இந்தியா, ஹாக்கி, செஸ் ஒலிம்பியாட் ஆகிய போட்டிகளை சிறப்பாக நடத்தியுள்ளோம். இந்நிகழ்வில், அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர் சுதா, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், கும்பகோணம் துணை மேயர் சு.ப தமிழழகன், முன்னாள் எம்.பி. செ இராமலிங்கம் உட்பட இவ்விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள், போட்டி நடுவர், பொது மக்கள் என பலர் இப்பரிசளிப்பு நிகழ்வில் பங்கேற்றனர்.
விழா நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது, “தமிழக அரசு, தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்விக்கான நிதி ஒதுக்கீடு செய்யாமல் உள்ளது மத்திய அரசு. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கண்டித்துள்ளார்.
தற்போது தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேரில் சென்று சம்மந்தப்பட்ட துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்திய போதும், அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வற்புறுத்துகின்றனர். இது மாநில உரிமைகளுக்கு எதிரானது.
கல்வி என்பது அந்தந்த மாநில மக்களின் தேவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப இருந்தால்தான் சரியாக இருக்கும். எனவே, இனியும் தாமதம் செய்யாமல் அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்பது தான் தமிழக அரசின் ஒட்டுமொத்த குரல்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் கங்குலி.. ஃபார்முலா கார் ரேஸ் பார்க்க வந்த பிரபலங்கள்!