சென்னை: சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் 20வது ஆண்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், முன்னாள் ஆளுநருமான சதாசிவம், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடம் உரையாற்றிய முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “ தேசிய கல்விக் கொள்கையில் தாய் மொழியில் படிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாம் முதலில் தாய்மொழி, இரண்டாவது சகோதர மொழி, கடைசியாக பிற மொழி என மொழியை கற்க வேண்டும். நான் இந்தி திணிப்பிற்கு எதிரானவன். தமிழர்கள் கடமையுணர்ச்சியுடன், கடுமையான உழைப்பாளிகளாக உள்ளனர்.
சிறந்த குடிமைப் பணி அதிகாரிகள் தமிழகத்தில் இருந்து தான் உருவாகியுள்ளனர். நான் தமிழ் நாட்டில் நின்று கொண்டுதான் சொல்கிறேன் இந்தி படியுங்கள். குழந்தைகளுக்கு இந்தி கற்க உதவுங்கள் அப்போது தான் அவர்கள் தேசிய அளவில் போட்டி போட்டு, தங்களது திறமை வளர்த்து கொள்ள முடியும்.
எனது இளம் பருவத்தில் நானும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். எனது ஊர் நெல்லூர் அங்கு இந்தி எதிர்ப்பு போரட்டம் நடக்கும் அப்போது இந்தி சொற்கள் எழுதப்பட்ட ரயில் நிலையத்திலும், தபால் நிலையத்திலும் தார் பூசி அழிப்பேன். பிற்காலத்தில் பாஜக தேசிய தலைவர் பதவியில் அமர்ந்த பிற்குதான் இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அறிந்தேன்.
இதையும் படிங்க: ஐஐஎம் போட்டியில் சாதித்த பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்; இவர்களின் பிசினஸ் மாடல் என்ன?
அப்போது தான் நான் இந்தி எழுத்துப் பலகையில் தார் அடிக்கவில்லை என் மீது நானே தார் அடித்துக் கொண்டேன் என்பது புரிந்தது. தேசிய தலைவராக இருக்கும் போது இந்தியில் உரையாட முடியவில்லை என வருந்தினேன். வட மாநிலங்களில் இருந்து வரும் தலைவர்கள் இந்தியில் தான் பேசினர்.
இந்தியாவில் 2 சதவீதம் மக்களுக்கு மட்டுமே ஆங்கிலம் புரியும். இந்தி மட்டுமல்ல முடிந்த வரை பல இந்திய மொழிகளை கற்று கொள்ள முயற்சி செய்யுங்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மாெழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
Happy to have addressed aspirants of civil services this morning at the 20th Institute day of celebrations of Shankar IAS Academy organised at Anna Centenary Library in Chennai today . I am told, Shankar IAS academy has empowered many individuals to pursue their dreams of… pic.twitter.com/wFfGDkAQ0w
— M Venkaiah Naidu (@MVenkaiahNaidu) December 6, 2024
இந்தியாவைப் பற்றி எதிர்மறையான கருத்துகள் தொடர்ந்து பரவி வருகின்றன. நமது பிரதமரை அனைத்து நாடுகளும் வரவேற்கின்றனர். அரசுப் பணிக்கும் செல்ல விரும்பும் நீங்கள் காலையில் உதயசூரியன் உதிக்கும் முன்னர் எழுந்திருக்க வேண்டும். நான் கூறுவது கட்சியின் சின்னத்தை அல்ல காலை 6 மணிக்கு முன்னர் எழுந்து பணியை தொடங்க வேண்டும். தற்பொழுது பலர் நேரம் இல்லை என கூறுகின்றனர். நமது நேரத்தை நாம் தான் உருவாக்கி கொள்ள வேண்டும். ஒரு அதிகாரியாக அரசியலை புறந்தள்ளி மனசாட்சியையும், அரசியலமைப்பு சட்டத்தை மட்டும் மனதில் வைத்து பணியாற்றுங்கள்” என தெரிவித்தார்.