சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியுள்ள நீதிமன்றம் அவருக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. எனினும், அமைச்சராக எந்த தடையும் விதிக்கவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ரூ.25 லட்சத்திற்கான பிணைத் தொகை, இரு நபர் ஜாமீன் உத்தரவாதம். ஜாமின் உத்தரவின் நகல் ஆகியவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், செந்தில் பாலாஜியை விடுவிக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்.. கரூரில் களைகட்டிய திமுகவினரின் கொண்டாட்டம்!
இதையடுத்து, 471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார். புழல் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பளித்தனர்.
பின்னர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், " என் மீது அன்பும், நம்பிக்கையும், பாசமும் வைத்திருந்த கழகத் தலைவர் முதலமைச்சருக்கு வாழ்நாள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது போடப்பட்ட இந்த பொய்வழக்கில் இருந்து சட்டப் போராட்டம் நடத்தி மீண்டு வருவேன்” இவ்வாறு அவர் கூறினார். இதனையடுத்து, மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
#WATCH | On being released from Puzhal Central Prison in Chennai after SC granted him bail today in a money laundering case linked to the cash-for-jobs scam, former Tamil Nadu minister V Senthil Balaji says " the case which was initiated against me was a fake case and was just a… pic.twitter.com/UXvlydj6KC
— ANI (@ANI) September 26, 2024
உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனையின் பெயரில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நாளை(செப்.27) காலை கையெழுத்திட வேண்டியுள்ளதால், செந்தில் பாலாஜி இன்று இரவு சென்னையிலேயே தங்குவார் எனவும், நாளை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட்ட பின்னர், நாளை இரவு டெல்லி சென்று திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கட்சி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்