கரூர்: நாட்டில் ஜனநாயக திருவிழாவாகக் கருதப்படும் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவித்து, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தங்கவேல், கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர் சட்டமன்ற தொகுதி, ஆண்டாங்கோயில், மேற்கு மற்றும் கிழக்கு ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்து பேசினார்.
கரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர் தற்பொழுது புழல் சிறையில் இருக்கிறார். ஐந்தாண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இப்பகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அவர் வாக்கு சேகரித்து வரும் பொழுது நீங்கள் அனைவரும் அவரிடம் என்ன செய்தீர்கள் என்று கேட்க வேண்டும். மக்களுக்காக எப்பொழுதும் உண்மையாக பணியாற்றும் தன் மீது காவல்துறை பல்வேறு வழக்குகளை பதிந்து வருகிறது.
இன்று கூட ஒரு வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என நீதிமன்றம் மூலம் தடை ஆணை பெற்றிருக்கின்றேன். நேற்று முன்தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு என்மீது காவல்துறை பிணையில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. இன்னும் எத்தனை வழக்குகளை வேண்டுமானாலும் என் மீது பதிவு செய்யுங்கள். அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றேன்.
கைதுக்கு பயந்தவன் நான் அல்ல. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம் நடைபெறப் போகிறது என்பதை பார்க்கத்தான் போகிறோம். தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டனை அனுபவிப்பார்கள். பொய்யான வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், மீண்டும் மக்களை ஏமாற்றி வாக்கு பெற முயற்சிக்கிறார்கள். இந்த முறை வாக்காளர்கள் சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.
திமுக தேர்தல் அறிக்கையில் 1100க்கு விற்கப்படும் சமையல் எரிவாயு 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். திமுக அரசு காலி எரிவாயு உருளையித்தான் 500 ரூபாய்க்கு வழங்க முடியும். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பெட்ரோலுக்கு 7 ரூபாயும், டீசலுக்கு ஐந்து ரூபாயும் குறைப்போம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி வழங்கியது. அதனை நிறைவேற்றவில்லை.
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் திமுக தேர்தல் வாக்குறுதியில் டீசல், பெட்ரோலுக்கு ரூபாய் 25 குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளனர். இதே போல, கல்லூரிகளில் கல்வி கடன் பெற்ற இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். கல்விக் கடனை ரத்து செய்வோம் என்று கூறினார். ஆனால் இதுவரை கல்வி கடனை ரத்து செய்யவில்லை. இப்போது நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறுகின்றனர். இது நடக்காது. போகாத ஊருக்கு வழி சொல்வதைப் போல உள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. அதிமுக அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்தி வைத்து விட்டு, பொய்யான வாக்குறுதிகளை அளித்து மீண்டும் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனவே, இம்முறை மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்” என்று பேசினார்.
இதையும் படிங்க: "மு.க.ஸ்டாலின் நடிப்பை பார்த்தால் நடிகர் திலகமே மயங்கியிருப்பார்" - கோவையில் முதலமைச்சரை விளாசிய ஈபிஎஸ்! - Lok Sabha Election 2024