சென்னை: சுதந்திர இந்தியாவின் மாநிலங்களில் சுதந்திரம் மற்றும் குடியரசு நாட்களில் மாநில ஆளுநர்களே கொடியேற்றி வந்தனர். 1974ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி, முதலமைச்சர்களை தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்க வேண்டும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அரசின் பரிந்துரை கடிதம் அனுப்பியிருந்தார்.
அதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை அடுத்து, 1974ஆம் ஆண்டிலிருந்து சுதந்திர தினத்தில் மாநிலத் தலைநகரங்களில் தேசியக் கொடியை மாநில முதலமைச்சர்கள் ஏற்றுவார்கள் என்றும், குடியரசு நாளில் அந்தந்த மாநில ஆளுநர்கள் கொடியேற்றுவார்கள் என மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
அதன் அடிப்படையில், சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றி வருகின்றனர். இது குறித்து திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "குடியரசு மற்றும் சுதந்திர நாளில் மாநில தலைநகரங்களில் வழக்கமாக ஆளுநர்கள் தான் கொடியை ஏற்றி வந்தனர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்தியதால், மாநில முதலமைச்சர்கள் சுதந்திர நாளில் கொடி ஏற்றவும், குடியரசு நாளில் ஆளுநர்கள் கொடியை ஏற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்ததன் அடிப்படையில், 1974ஆம் ஆண்டு சுதந்திர நாளில் நாடு முழுவதும் உள்ள முதலமைச்சர்கள் முதன் முறையாக கொடியை ஏற்றினார்கள்.
சுதந்திரம் அடைந்த நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி நடத்துபவர்கள் கொடியை ஏற்றுவது அந்த மக்களுக்கு அளிக்கும் மரியாதையாக இருக்கும். ஆனால், ஆளுநர்கள் அரசால் நியமிக்கப்படுபவர்கள். அவர்கள் அரசாங்கத்தின் தலைவராக இருப்பதால் அவர்களுக்கும், ஜனநாயகத்திற்கும் தொடர்பு இல்லை.
அந்த வகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சுதந்திர நாளில் கொடியேற்றுவது அந்த மாநிலத்திற்கு ஒரு சிறப்பை சேர்க்கும். சுதந்திர நாளில் கொடியேற்றுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில முதலமைச்சராக யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு கிடைக்கும் உரிமையாக பார்க்க வேண்டும்.
சுதந்திர நாளில் கொடியேற்ற மாநில முதலமைச்சருக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த உரிமை ஜனநாயக நாடாக விடுதலை அடைந்ததன் அடிப்படையில், ஆட்சி ஜனநாயக முறைப்படி நடக்கும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெற்று பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்களுக்கு ஒரு பொறுப்பு இருக்க வேண்டும் என்பதற்காக மாநில முதலமைச்சர்கள் கொடி ஏற்றும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மாஞ்சோலை தொழிலாளர்களின் அனைத்து வழக்குகளும் ஒத்திவைப்பு!