கோயம்புத்தூர்: இந்திய மனநல மருத்துவ சங்கம் சார்பில் நேரு விளையாட்டு அரங்கம் முன்பு பொதுமக்களிடம் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டி 3 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என மூன்று பிரிவாக நடைபெற்றது. இந்த மாரத்தானை முன்னாள் டிஜிபி ரவி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் டிஜிபி ரவி கூறுகையில், மன நலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி இந்த மாரத்தான் நடைபெற்றதாக தெரிவித்தார். மேலும் போதை பொருட்களுக்கு அடிமையானவர்ககளை அடையாளம் கண்டு அவர்களுக்கு மன நல ஆலோசனை மேற்கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொண்டார்.
காவல்துறையின் நடவடிக்கையால் தமிழகத்தைப் பொறுத்தவரை போதை புழக்கம் தற்போது குறைந்து கொண்டு வருகிறதாகவும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறதாகவும் தெரிவித்தார். சமூகஊடகங்கள், திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் நல்ல விதமாக சித்தரிக்கப்படுவதால் ஒரு சில இளைஞர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறினார்.
மேலும் மனநலம் சரியில்லாதவர்கள் தான் குற்றவாளிகளாக மாறுவதாகவும், அதனால் மனநலத்தை காக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், சமூக நலத்தை சரி செய்வதற்கு தான் போலீஸ் என்கவுண்டரைப் பயன்படுத்துகிறார்கள் என்றும், காவல்துறையிடம் துப்பாக்கி இருப்பது மக்களைப் பாதுகாப்பதற்குத் தான் எனக் கூறினார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண்கள் கைது செய்யப்பட்டது கூறித்து பேசிய அவர், ஆணும், பெண்ணும் சமம் என்று சொல்லும் போது பெண் தாதாக்கள் என்பது வரலாற்றிலிருந்து இருக்கிறது, அது புது விஷயம் அல்ல என்று கூறினார்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கி வைத்திருக்கக் கூடாது என்ற சுற்றறிக்கை வந்ததாகவும், தற்போது அது மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளனர் என்றும் இது புது நடைமுறை அல்ல எனவும் தெரிவித்தார். மேலும் காவல்துறை, அரசு அதிகாரிகளுடைய மன நலம், உடல் நலம் நன்றாக இருக்கும் பட்சத்தில் மக்களுக்கு நன்றாகச் சேவை செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்" - எல்.முருகன் வலியுறுத்தல்!