கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அங்கலக்குறிச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆனைமலை கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணி பிரகதீஸ் ஏற்பாட்டில் நேற்று (மார்ச் 2) நடைபெற்றது.
இவ்விழாவிற்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் தி.கா.அமுல் கந்தசாமி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்களுக்கு சேலை, பீரோ மற்றும் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம், இஸ்திரிப் பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர் மேடையில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைக் கிடப்பில் போட்டுவிட்டது. தற்போது தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் அதிக அளவில் உள்ளன. காவல்துறை இன்றைக்கு இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை. போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்தாத அரசாக திமுக உள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் போதைப்பொருட்கள் விற்பனைக்குத் தடை இருந்தது.
திமுகவின் 38 எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் வேஸ்ட் லக்கேஜ் ஆக உள்ளனர். 2014ஆம் ஆம் ஆண்டு 37 அதிமுக எம்பிக்கள் இருந்த போது, காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என 20 நாள்கள் நாடாளுமன்றத்தை முடக்கியதோடு, காவிரி மேலாண்மை மசோதாவை நிறைவேற்றினார். இன்றைக்கு நம்முடைய வரிப்பணத்தைத் திருப்பிக் கொடுக்கவே யோசிக்கிறார்கள்.
கடந்த ஆட்சியில் எம்பி ஆக இருந்தால் மகேந்திரன் பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தார். ஆனால், தற்போதைய திமுக எம்பியை காணவில்லை. அவர் தொகுதி பக்கம் கூட வருகிறார எனத் தெரியவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் மட்டும் அல்ல, சட்டமன்ற தேர்தலிலும் 200-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார்" எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி , பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி வாசு, சட்டமன்ற பொறுப்பாளர் வெங்கடாசலம், எம்.ஜி.ஆர் இளைஞரணி பிரகதீஸ், ஒன்றிய செயலாளர்கள் ஜி.கே.எஸ் .கார்த்திக் அப்புச்சாமி மற்றும் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்திரி ரகுராம் நியமனம்!