தேனி: தேனி மாவட்டம், கம்பம் கோம்பை ரோடு பகுதியில் நேற்று காலை ஒரு சிறுத்தையின் நடமாட்டம் காணப்பட்டது. இதனையடுத்து, சிறுத்தையை அப்பகுதியில் தேடிச் சென்ற வனத்துறை ஊழியரையும் அச்சிறுத்தை தாக்கியது. இது தொடர்பான காட்சிகளும் வெளியானது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக தொடர்ந்து வனத்துறையினர், காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு, சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். முன்னதாக, நேற்று முழுவதும் சிறுத்தையைத் தேடிய நிலையில், அது இருக்கும் இடத்தைக் கண்டறிய முடியவில்லை.
மேலும், இரவு நேரம் என்பதால் ட்ரோன் கேமராக்களை மட்டும் வைத்து சிறுத்தை பதுங்கி இருந்த பகுதி முழுவதும் தீவிரமாக தேடி வந்தனர். அதனைத் தொடர்ந்து இன்றும் ட்ரோன் கேமராக்களைக் கொண்டு சிறுத்தை பதுங்கி இருந்ததாகக் கண்டறியப்பட்ட பகுதி முழுவதும் வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதேநேரம், சிறுத்தை பதுங்கி இருந்த பகுதி முழுவதும் புதர் மண்டி கிடப்பதால், ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அந்தப் பகுதியை தற்போது சுத்தம் செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் இந்த பகுதியில் இருந்த சிறுத்தையானது இடம்பெயர்ந்து வனப்பகுதிக்குள் சென்று இருக்கலாம் என வனத்துறையினர் யூகித்து வருகின்றனர். எனினும், தொடர்ந்து இந்தப் பகுதி முழுவதும் தீவிரமான கண்காணிப்பில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மின்னல் வேகத்தில் மொட்டை மாடியில் இருந்த நாயை வேட்டையாடிய சிறுத்தை!