நீலகிரி: குன்னூர் அருகே உள்ள ஃபாரஸ்ட்டேல் பகுதியில் தனியார் தோட்டத்தை சுத்தம் செய்யும் போது குப்பைகளைத் தீயிட்டு எரித்துள்ளனர். அப்போது தீயானது அருகில் உள்ள வனப்பகுதியில் பரவியது. இதனைத் தொடர்ந்து, வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் கடந்த நான்கு நாட்களாக தீயை அணைக்க போராடியும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தோட்ட உரிமையாளர் உள்பட பணியாளர்கள் நால்வரை கைது செய்த குன்னூர் போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.
நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அப்பகுதியை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, இன்று சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, குன்னூர் ரேலியா அணையிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து, தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின், வனப்பகுதியில் ஒரு சில இடங்களில் தீ கட்டுக்குள் வந்தது. மேலும் குன்னூர், கோத்தகிரி, கட்டப்பெட்டு, உதகை உள்ளிட்ட வன ஊழியர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள் இப்பகுதியில் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இந்த வனங்களில் வாழ்ந்து வந்த வனவிலங்குகளும் அருகில் உள்ள அடர் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றுள்ளது. அது மட்டுமின்றி, அரிய வகை பறவைக் கூடுகள், ஊர்வன உள்ளிட்ட வனவிலங்குகள், காட்டுத்தீயில் எரிந்திருக்கக் கூடும் என்றும், அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் உள்ளிட்டவையும் இந்த காட்டுத்தீயில் எரிந்துள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்கள் வேதனையுடன் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: "மதச்சண்டை வந்தால்தான் பிரதமராக இருக்க முடியும் என்கிறார் மோடி" - எம்.பி ஆ.ராசா தாக்கு!