ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கேர்மாளம் வனப்பகுதியில் வனத்துறையினருடன் மாவோயிஸ்ட் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாசக்குட்டை பகுதியில் தந்தம் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், போலீசார் பாசக்குட்டை இடத்திற்கு மாறுவேடத்தில் சென்றனர்.
தந்தம் வாங்கும் வியாபாரிகள் போலச் சென்ற மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு போலீசார், பாசக்குட்டையைச் சேர்ந்த நபரிடம் விலைக்கு தந்தம் கேட்டுள்ளனர். அந்த நபர் மற்றொரு நபரிடம் அறிமுகப்படுத்திய போது வந்திருப்பது போலீசார் என சந்தேகமடைந்த நபர் தந்தம் விற்பனை செய்வதில்லை என மழுப்பி உள்ளார்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், பாசக்குட்டை வனத்தில் ஒரு ஜோடி யானை தந்தத்தை மண்ணில் புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில், போலீசார் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று தோண்டிய போது ஐந்தரை அடி நீளமுள்ள இரு யானை தந்தங்களைக் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
ஒரு யானை தந்தத்தின் எடை 30 கிலோ வரை இருப்பதால் கடத்துவதற்கு ஏதுவாக தந்தத்தை கம்பியால் சுற்றி வைத்ததும் தெரியவந்துள்ளது. விசாரணையில், பாசக்குட்டையைச் சேர்ந்த துரைசாமி (42) என்பதும் கிராமத்தில் பெட்டிக்கடை மற்றும் இறைச்சி கடை வைத்திருப்பதும், இறந்த யானையின் உடலிருந்து தந்தங்களை திருடியதும் தெரியவந்துள்ளது.
தமிழக - கர்நாடக வனத்தையொட்டியுள்ள ஊகியம் வனத்தில் அண்மையில் இறந்த யானையின் தந்தங்கள் காணாமல் போனதாக கர்நாடக வனத்துறை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் அதுக்கும், பறிமுதல் செய்த யானை தந்தத்துக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: மசினகுடியில் தனியாக சுற்றித்திரிந்த குட்டியானை..தாயுடன் சேர்த்த வனத்துறை!