நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை பாரஸ்ட் டேல் பகுதி அடர்ந்த வனங்கள் நிறைந்த பகுதியாகும். இந்த வனப்பகுதியை ஒட்டி ஏராளமான தேயிலைத் தோட்டங்களும், குடியிருப்பு பகுதிகளும் அமைந்துள்ளன. இந்த வனப்பகுதியில் அவ்வப்போது தீ விபத்து நேர்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது நீலகிரி மாவட்டம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வரும் சூழல் உள்ளது. இதன் காரணமாக, குன்னூரில் உள்ள பல இடங்களிலும் காய்ந்து கருகி உள்ள மரங்கள் அவ்வப்போது தீப்பிடித்து எரிந்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், நேற்றைய முன்தினம் (மார்ச் 12) இரவு பாரஸ்ட் டேல் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த பகுதியில், சாம்பிராணி மரங்கள் மற்றும் கற்பூர மரங்கள் போன்றவை அதிகம் உள்ளதால் தீ எளிதில் பரவி, ஏராளமான மரங்கள் மற்றும் செடிகள் கொழுந்து விட்டு எரிந்தன. இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
இதனை அடுத்து, நீண்ட நேரம் போராடியும் தீயணைப்புத் துறையினரால் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல், நேற்று (மார்ச் 13) இன்று (மார்ச் 14) என இரண்டு நாட்களாகத் தொடர்ச்சியாகப் போராடி காட்டுத்தீயை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதற்கு இடையில், வனத்துறையினர் இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில் இந்த காட்டு தீ விபத்து தானாக ஏற்பட்டது அல்ல என்பது தெரியவந்தது.
மேலும் இந்த விசாரணையில், வண்டிச்சோலை பகுதியில் எபினேசர் ஜெயசீலபாண்டியன் என்பவருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டத்தில், நேற்றைய முன்தினம் (மார்ச் 12) கவாத்து செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், அப்போது தேயிலை செடிகளின் கழிவுகளை அங்கிருந்த பணியாளர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இதுமட்டும் அல்லாது, தேயிலைத் தோட்டத்தில் வைக்கப்பட்ட தீ பரவி வனப்பகுதியில் காட்டுத் தீயாகக் கட்டுக்கடங்காமல் பரவியுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, தோட்ட உரிமையாளர் எபினேசர் ஜெயசீலபாண்டியன் மற்றும் ஊழியர்கள் கருப்பையா (63), மோகன் (35), ஜெயக்குமார் (60) ஆகிய நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட நால்வரும், குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குன்னூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளிடையே பேரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேயிலைத் தோட்டங்களில் பணிகள் செய்யும்போது, அங்குச் சேரும் கழிவுகளை தீ வைத்து எரிக்கக்கூடாது என தற்போது வனத்துறையினர் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ.. அரியவகை மூலிகைகள் உட்பட 300 ஏக்கர் வனப்பகுதி சேதம்!