திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னப்பள்ளிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட கீரின் குட்டையைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் அதே பகுதியில் உள்ள கரும்புத்தோட்டம் அருகில், அவருக்குச் சொந்தமான கன்றுக்குட்டியை மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்த போது, கன்றுக்குட்டியை நோட்டமிட்டபடி சிறுத்தை ஒன்று பாறை மீது அமர்ந்திருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கூச்சலிட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, சிறுத்தை வனப்பகுதிக்குச் சென்றுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி வனத்துறையினர், சிறுத்தை நடமாட்டம் இருந்த கிராமப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின், பொதுமக்கள் அதிகமாக வெளியில் நடமாட வேண்டாம் என்றும், கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் கட்டி வைக்கவும் வனத்துறையினர் கிராம மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த மாதம் திருப்பத்தூர் நகர் பகுதியில் நுழைந்த சிறுத்தையை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்து, தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியாட மாதகடப்பா மலைப்பகுதியில் சிறுத்தையை விட்ட நிலையில், மீண்டும் சிறுத்தை கிராமப் பகுதிகளில் நுழைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு! - tirupathur Collector Office