சென்னை: சென்னை வேப்பேரியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பாலிடெனிக் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் 8 பேருக்கு இன்று திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநகராட்சி மருத்துவமனையில் மாணவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து, மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில், 8 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டத்தை தொடர்ந்து, நேரடியாக சென்னை மண்டல உணவு பாதுகாப்பு அதிகாரி சதிஷ்குமார் தலைமையில் கேண்டீனை ஆய்வு செய்தனர்.
அப்போது கேண்டீனில் சுத்தமாக பராமரிக்காமல் இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும், அங்குள்ள பொருட்களை ஆய்வு செய்ததுடன், அதனை பயன்படுத்தக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தனர். கேண்டீனை முழுவதுமாக ஆய்வு செய்த பின்னர், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவகத்தில் சுத்தம், சுகாதாரம், பராமரிப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் கேண்டீனை மூடி, உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும், கேண்டீன் முழுவதுமாக சீரமைக்கப்பட்டு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டதன் பின்னரே மீண்டும் கேண்டீன் திறக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். மேலும், மழைக்காலம் தொடங்குவதால் கேண்டீனில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் சுத்தம் குறித்தும், கேண்டீன் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதிஷ்குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "சுகாதாரமற்ற பானிபூரிகளை விற்றால் கிரிமினல் வழக்கு பாயும்" - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரிக்கை!