தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அண்ணா குடியிருப்பு பகுதியில் தரமற்ற மாட்டு இறைச்சியை விற்ற இரண்டு கடைகளுக்கு உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் தலா ரூபாய் 5000 வீதம் அபராதம் விதித்துள்ளனர். உணவகங்கள் மற்றும் இறைச்சி கடைகளில் தரமற்ற இறைச்சிகள் விற்கப்படுவதாக எழுந்த தொடர் புகார் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் உள்ள இறைச்சி கடைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், பட்டுக்கோட்டை அண்ணா குடியிருப்பு பகுதியில் உள்ள மூன்று கடைகளில் தரமற்ற இறைச்சி விற்கப்படுவதாக பட்டுக்கோட்டை நகர உணவு பாதுகாப்பு அலுவலரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சித்ரா அறிவுறுத்தலின்படி பட்டுக்கோட்டை நகர உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் பட்டுக்கோட்டை அண்ணா குடியிருப்பு பகுதியில் உள்ள 3 மாட்டு இறைச்சிக் கடைகளை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வின்போது தரமற்ற மூன்று கிலோ மாட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு கிறிமி நாசினி தெளிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. பின்னர், அருகில் உள்ள இரண்டு மாட்டு இறைச்சி கடைகளை ஆய்வு செய்த நிலையில், அப்போது எந்த ஒரு உரிமம் இல்லாமலும் மாட்டு இறைச்சி கடை செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், மாட்டு இறைச்சி கழிவுகள் 1,900 கிலோ திறந்த நிலையில் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படுத்தும் வகையிலும் துர்நாற்றத்துடன் பொதுவெளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் மாட்டு இறைச்சி கழிவுகளை அழித்தனர்.
மேலும் கடைகளில் உள்ள வளாகத்தில் இறைச்சிக்காக வளர்க்கப்பட்ட மாடுகளின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்ட போது இரண்டு மாடுகள் நோய்வாய்ப்பட்டு இருந்ததை கண்டறியப்பட்டு அந்த மாடுகளை இறைச்சிக்கு பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இனி வரும் காலங்களில் மாடுகளை நகராட்சி ஆடு வதை கூடாரத்தில் தான் வதை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக தரமற்ற மாட்டிறைச்சி விற்ற இரண்டு கடைகளுக்கு தலா ரூபாய் 5000 வீதம் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.