சென்னை: திருவேற்காடு அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுகாதாரமின்றி சமைத்ததால் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரியாணி கடை உரிமையாளர், பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருவேற்காடு அயனம்பாக்கம் பகுதியில் பிரபலமான பிரியாணி கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு சென்னையின் பிற பகுதிகளில், 10 இடங்களில் கிளைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தக் கடையில் பிரியாணி மற்றும் உணவுகள் தரமற்ற முறையில் இருப்பதாகவும், சமையலறை உள்ளிட்ட பகுதிகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் உணவு பாதுகாப்புத் துறைக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்ததாக தெரிகிறது.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக விடாமல் தடுப்பது எது? முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ள தயக்கம் என்ன?
இப்புகார்களின் அடிப்படையில் அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பிரியாணி கடையில் இன்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரவீந்திரநாத் தலைமையில் வந்த உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுகாதாரமற்ற முறையில் கடையின் சமையலறை இருப்பதும், தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் கடையை பூட்டி சீல் வைக்க முயன்றுள்ளனர்
இதனால் ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பிரியாணி செய்வதற்கு பயன்படும் டபராக்கள் உள்ளிட்ட சமையல் பாத்திரங்களை சாலை நடுவே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார், சாலையில் சமையல் பாத்திரங்களுடன் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போலீசாரின் பாதுகாப்புடன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.