திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் கடந்த சில நாட்களாக காலாவதியான பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கலைவாணி தலைமையிலான குழுவினர், பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படும் அனைத்து கடைகள் மற்றும் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடங்களை ஆய்வு செய்தனர்.
பின்னர், காலாவதியானதாக கூறப்படும் பிரசாதங்களை கைபற்றி ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், குடோனுக்கு சென்று பிரசாதங்களை சோதனை செய்தனர். இதனிடையே, தேவஸ்தான நிர்வாகம் தைப்பூசத்திற்கு அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் வரக்கூடும் என்பதால் பஞ்சாமிர்த தயாரிப்பை அதிகப்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் பஞ்சாமிர்த விற்பனை போதிய அளவில் நடைபெறவில்லை என்றும், இதனால் தேக்கம் அடைந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. மேலும், அண்மையில் விற்பனை செய்யப்பட்ட பிரசாதங்களில் காலாவதியான பிரசாதங்கள் கலந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, 80 ஆயிரத்திற்கு மேற்பட்ட காலாவதியான பஞ்சாமிர்த டப்பாக்களை பழனி அருகே உள்ள கள்ளிமந்தையம் பகுதியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான கோசாலையில், குழி தோண்டி புதைக்கப்பட்டதாகவும் தகவல் பரவி வருகின்றன. இந்நிலையில், இது குறித்த விளக்கத்தை கோயில் நிர்வாகம் அளிக்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊரப்பாக்கம் பகுதிவாசிகளே உஷார்.. தப்பியோடிய அனுமன் குரங்குகளை பிடிக்கும் முயற்சியில் ஊழியர்கள்!