சென்னை: குடும்ப அட்டை தரவுதளத்தை மேம்படுத்தும் வண்ணம், இறந்த, புலம் பெயர்ந்த குடும்ப அட்டைதாரர்களைக் கண்டறிந்து பெயர் நீக்கம் செய்யும் முறை தீவிரபடுத்தப்பட்டு வருகிறது என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கொள்கை விளக்க செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குடும்ப அட்டை தரவுத்தளத்தை மேம்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மே 2021 முதல் மே 2024 வரை 4,49,545 ஒரு நபர் குடும்ப அட்டைகள் ஒப்புதல் செய்யப்பட்டும், 19,38,788 குடும்ப உறுப்பினர்கள் இறப்பு, புலம்பெயர்தல் போன்ற பல்வேறு காரணங்களால் குடும்ப அட்டைத் தரவுகளில் இருந்து நீக்கம் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இறந்த நபர்களின் விவரங்களை பிறப்பு, இறப்பு பதிவாளரிடமிருந்து தமிழ்நாடு மின்னாளுமை முகமை வாயிலாக உரிய காலவரையறை முறையில் பெறப்பட்டு, பொது விநியோகத் திட்ட தரவுத் தொகுப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல், தமிழகத்தில் மொத்தம் 797 நியாயவிலைக் கடைகள் வாடகை கட்டங்களில் இயங்குவதாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19,872 நியாய விலைக் கடைகள் சொந்தக் கட்டடங்களிலும், 9,285 நியாய விலைக் கடைகள் வாடகையில்லா கட்டடங்களிலும், 7,797 நியாய விலைக் கடைகள் வாடகைக் கட்டடங்களிலும் செயல்படுவதாகவும் தனியார் வாடகைக் கட்டடங்களில் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்குச் சொந்த கட்டடங்கள் கட்டுவதற்கு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்த வருவதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தவெக தலைவராக நாளை மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்.. சென்னை விரையும் மாணவர்கள்!