திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் வாகை குளத்தைச் சேர்ந்த ரவுடி தீபக் ராஜா என்பவர் கடந்த 20ஆம் தேதி தனது காதலி மற்றும் காதலியின் தோழிகளோடு கேடிசி நகர் ஹோட்டல் சென்றபோது மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பாதுகாப்பு வளையத்தில் நெல்லை: இந்நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பசுபதி பாண்டியன் தீவிர ஆதரவாளரான தீபக் ராஜா மீது ஏற்கனவே இரட்டை கொலை உட்பட பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சாதி ரீதியிலான மோதலில் தீபக் ராஜா கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் நெல்லை போலீசார் கருதுகின்றனர். எனவே தீபக் ராஜாவின் கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக அவரது சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் ஈடுபடலாம் என்பதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் பழைய ரவுடிகளின் பட்டியலை போலீசார் தூசி தட்டி பார்த்தனர். குறிப்பாக செல்வின் நாடாரில் தொடங்கி ராக்கெட் ராஜா, வெங்கடேஷ் பண்ணையார், சுபாஷ் பண்ணையார் என கூடவே இருந்து பணியாற்றிய முக்கிய நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு போலீசார் தனிப்பட்ட முறையில் 24 மணி நேரம் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
ரவுடிக்கு 24 மணி நேர பாதுகாப்பு: குறிப்பாக ஒரு காலத்தில் ரவடியாக இருந்து தற்போது அதை கைவிட்டு குடும்பத்தோடு வாழ்ந்து வரும் பலருக்கும் போலீசார் வீடு தேடி சென்று பாதுகாப்பு கொடுத்துள்ளனர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே இடையார் தவனையை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலும் பழைய ரவுடிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் நெல்லை உச்சகட்ட பதற்றத்துடன் காணப்படுகிறது.
இக்கொலை சம்பவத்தில் தற்போது 4 பேர் கைதாகியுள்ள நிலையில், பத்துக்கும் மேற்பட்டோர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தற்போது பிடிபட்ட நாலு பேரும் நேரடியாக கொலையில் ஈடுபடவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
எனவே, நேரடியான குற்றவாளிகளை கைது செய்யும் வரை தீபக் ராஜா உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எந்த நேரமும் பழிக்கு பழியாக குற்ற சம்பவங்கள் நடைபெறலாம் என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் எஸ்பி சிலம்பரசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக பிரச்சினைக்குரிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி தெரிவிக்கையில்; தீபக் ராஜா உடலை உறவினர்கள் பெரும் வரை பிரச்சினை ஏற்படாமல் இருக்கவும், அவரது உடலை கொண்டு செல்லும் போது பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவும் இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், போலீசார் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தோழியின் சதி.. தீபக் ராஜாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கூலிப்படை.. முழு பின்னணி