சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 2வது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இதனால், விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு இருந்து 70 பயணிகளுடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், டெல்லியிலிருந்து 158 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 2 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்ட மடித்தன. அதன் பின்பு கோழிக்கோடு விமானம் திருச்சிக்கும், டெல்லி விமானம் பெங்களூருக்கும் திருப்பி அனுப்பப்பட்டன.
அதேபோல, மதுரை, மும்பை, கோவை, டெல்லி, ஹைதராபாத், கோவா, வாரணாசி உள்ளிட்ட 10 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து தத்தளித்தன. அதைத்தொடர்ந்து, மழை, சூறைக்காற்று மற்றும் இடி மின்னலின் வேகம் குறைந்த பின்பு, இந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக, சென்னையில் தரை இறங்கின.
மேலும், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய துபாய், குவைத், சிங்கப்பூர், கோலாலம்பூர், அபுதாபி, பாங்காக், டெல்லி, ஜெய்ப்பூர், ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 14 விமானங்கள், இடி மின்னல், சூறைக்காற்று வேகம் குறைந்த பின்பு, தாமதமாகச் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றன.
சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு திடீரென இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக, 2 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர், திருச்சிக்கு திரும்பிச் சென்றது. மேலும், இன்று அதிகாலையில் 10 வருகை விமானங்கள், 14 புறப்பாடு விமானங்கள் தாமதமானது. அதாவது, மழை காரணமாக 26 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதால், சென்னை விமான நிலைய பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதையும் படிங்க: சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை.. வேரோடு சாய்ந்த 80 வருட பழமையான ஆலமரம்!