சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் 10 உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்தன. இதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தலைவர் மற்றும் 14 உறுப்பினர் பதவிகள் உள்ளன. ஆனால், தற்போது முனியநாதன் ஐஏஎஸ் (ஒய்வு), ஜோதி சிவஞானம், அருள்மதி, ஆரோக்கியராஜ் ஆகிய 4 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
அதில், ஒருவரான முனியநாதன், தலைவர் பொறுப்பை கூடுதலாக வகித்து வருகிறார். தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் பல மாதங்களாக காலியாக இருந்து வரும் நிலையில், டி.ஜி.பி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற சைலேந்திரபாபு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கு தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டார்.
மேலும், 10 உறுப்பினர் பதவிகளை நியமனம் செய்வதற்கான பெயர்களை தமிழக அரசு, ஆளுநருக்கு கோப்பு மூலம் பரிந்துரை செய்திருந்தது.இந்த நிலையில், தமிழக அரசு அனுப்பிய கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல், 2023 ஆகஸ்ட் 22ஆம் தேதி சைலேந்திரபாபு தொடர்பாக சில விளக்கங்களைக் கேட்டு மீண்டும் தமிழக அரசுக்கு கோப்பை திருப்பி அனுப்பி இருந்தார்.
மேலும், அவர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி, எதன் அடிப்படையில் இவர்களை தகுதி வாய்ந்தவர்கள் என தேர்வு செய்தீர்கள் என கேள்வியும் எழுப்பி இருந்தார். மேலும், வெளிப்படைத் தன்மையுடன் பணியாளர் தேர்வாணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான விளம்பரம் செய்யப்பட்டதா எனவும், இவர்களைத் தேர்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவில் யார், யார் உறுப்பினர்களாக இருந்தனர் எனவும், அவர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் இவர்களைத் தேர்வு செய்தனர் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டு இருந்தார்.
இந்நிலையில், 2023 ஆகஸ்ட் 31ஆம் தேதி சைலேந்திரபாபுவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கான காரணங்கள், பின்பற்றப்பட்ட சட்ட விதிமுறைகள், நீதிமன்ற வழிகாட்டுதல்கள், தேர்வாணையத்தின் சட்ட விதிகள் உள்ளிட்ட விவரங்கள் ஆவணங்களாகத் தயார் செய்யப்பட்டு, ஆளுநர் மாளிகையில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆளுநர் எழுப்பிய கேள்விகளும், அதற்கான விளக்கங்களும் அதில் இடம் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் வெளியானது.
இந்த நிலையில், அக்டோபர் 26ஆம் தேதி 2வது முறையாகவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நியமனம் செய்வதற்கான கோப்புகளை, ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதுடன், அனுமதி அளிக்காமல் இருந்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மனித மேலாண்மைத் துறையின் செயலாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு எம்.பி.சிவனருள் ஐஏஎஸ் (ஓய்வு). சரவணகுமார் ஐஆர்எஸ், தவமணி, உஷா சுகுமார், பிரேம்குமார் ஆகிய 5 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர் எனவும், இவர்கள் பதவி ஏற்ற நாள் முதல் 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரையில் பதவியில் இருப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: குரூப்-4 தேர்வு தேதியை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி: 6,244 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்