சென்னை: சட்ட விரோத மணல் குவாரி முறைகேடு வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்கள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகி உள்ளனர். முதலில், சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக மாவட்ட ஆட்சியர்கள் வழக்கறிஞர்களுடன் வந்தனர்.
அப்போது, சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக காத்திருந்த ஐந்து மாவட்ட ஆட்சியர்களிடம், இங்கு அமலாகத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தப்படவில்லை எனவும், நுங்கம்பாக்கம் குஷ்குமார் சாலையில் இருக்கக்கூடிய சென்னை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்படுகிறது, எனவே அந்த இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இதையடுத்து, விசாரணைக்கு ஆஜரான ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் ஆவணங்களுடன் வழக்கறிஞர்களை அழைத்துக் கொண்டு சாஸ்திரி பவன் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, மற்றொரு அமலாக்கத்துறை அலுவலகமான நுங்கம்பாக்கம் குஷ்குமார் சாலையில் உள்ள அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.
அந்த அலுவலகத்தில் ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர்கள், அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். இந்த வழக்கில் சில விளக்கங்களை மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்க வேண்டுமென அமலாக்கத்துறை அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில், நீதிமன்றத்தின் உத்தரவின் படி மாவட்ட ஆட்சியர்கள் இன்று விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.
இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள் அலைக்கழிக்கப்பட்டதாக அவர்களது வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மாவட்ட ஆட்சியர்கள் எந்த அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என முறையான எந்த தகவலும் அளிக்கவில்லை எனவும், இதனால் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.