சென்னை: நடப்பாண்டின் (2024) முதல் சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் 2024 - 2025ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.19) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தாக்கல் செய்யும் பட்ஜெட் என்பதால், இதில் பல முக்கிய நலத்திட்ட அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். இதற்கிடையே, மாநிலத்தின் நிதி பற்றாக்குறை குறித்து கூறுகையில், 2024-25ம் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதில், "2024-25ம் நிதியாண்டில், நிதி பற்றாக்குறை 1 லட்சத்து 8 ஆயிரத்து 690 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.44 சதவிகிதம் ஆகும். மாநிலத்தின் வளர்ச்சியைப் பாதிக்காமல், நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் சீரிய நிதி நிர்வாக மேலாண்மையை அரசு கடைபிடித்துள்ளது.
அந்த வகையில், கடந்த 2022-23 நிதியாண்டில் 3.46 சதவிகிதமாக இருந்த நிதிப்பற்றாக்குறை, 2023-24ல் 3.45 சதவிகிதமாகவும், 2024-25ல் 3.44 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. மேலும், மாநிலத்தின் வரவு-செலவு திட்ட வருவாய் ஆதாரங்களில் இருந்தே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு இழப்பீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதோடு, பேரிடர்களால் கடும் பாதிப்பைச் சந்தித்த போதிலும், நிதிப்பற்றாக்குறை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த நிதியாண்டில் 0.01 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வரவு-செலவு திட்டம் பல்வேறு சவால்கள் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியிலும் நிதி மேலாண்மை உறுதியாகக் கடைப்பிடிக்கப்பட்டதை கோடிட்டுக் காட்டுகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2024: முக்கிய அறிவிப்புகள் விவரம்!