விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி இதுவரை ஐந்து பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: WIFI கேபிள் வயரில் சிக்கிய இளைஞர்.. பேருந்துக்கு அடியில் சென்றதால் பரபரப்பு! - Cable Wire Accident In Chennai