ஈரோடு: சாந்தாங்காடு பகுதியைச் சேர்ந்த ராவணன் என்பவர் சத்தியமங்கலம் செல்லும் சாலையில் கட்டுமானத்திற்கு தேவையான பைப் உள்ளிட்ட உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல பணியாளர்கள் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், திடீரென கடையின் உள்ளே இருந்து கரும் புகையுடன் தீ பரவி உள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், உடனடியாக கடையை விட்டு வெளியேறி ஈரோடு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட தீயணைப்பு அதிகாரி அம்பிகா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால் பவானி, பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்து 6-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 30 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்நிலையில், கடையில் விற்பனைக்காக பைப், டியூப், ராட்சத ஒயர், இரும்பு பைப், மரப்பலகைகள் போன்ற கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் உதரி பாகங்கள் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், பற்றி எரிந்த தீயின் காரணமாக கரும்புகை வானத்தை நோக்கி 50 அடிக்கு மேல் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், அருகில் உள்ள தனியார் மருத்துவமனை குடியிருப்பு பகுதிகளிலும் கரும்புகை சூழ்ந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
மேலும், அந்தப் பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிப்பு செய்து மற்ற கடைகளுக்கு மேலும் தீ விபத்து பரவாமல் இருக்க தீயணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே தீ விபத்தை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கடை முன்பு கூடியதால் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் பின்னர் அதிக அளவில் போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தி தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான கட்டுமான உதிரி பாகங்கள் எரிந்து கடை முழுவதும் சேதமடைந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார், வருவாய் துறையினர், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தீவிபத்து நடைபெற்ற இடத்தை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டனர். தீயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த அறிவுறுத்தி உள்ளனர். மேலும், அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.