ராணிப்பேட்டை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சி வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சியினர் அரக்கோணத்தில் திறந்தவெளி வாகனத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்டனர்.
அந்த வாகனம் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்த போது, அங்கிருந்த காங்கிரஸைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் திடீரென அந்த திறந்தவெளி வாகனத்தின் மீது ஏறி, அங்கு நின்றவர்களை கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், நகர காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி, இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த விமல் உள்ளிட்ட சிலர் காயமடைந்த நிலையில், மற்றவர்கள் அந்த வேனில் இருந்து இறங்கி ஓடியதாக கூறப்படுகிறது.
மேலும், அப்பகுதியில் இருந்த பொதுமக்களும் அலறி அடித்து ஓடியுள்ளனர். மேலும், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், பார்த்தசாரதி மற்றும் விமல் இருவரையும் கீழே இழுத்து மீண்டும் தாக்க முயன்ற போது பொதுமக்கள் கூடியதால், அவர்கள் அங்கிருந்து ஓடியுள்ளனர். இதை அடுத்து பிரசாரம் ரத்து செய்யப்பட்டு, வாகனங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இந்நிலையில், காயமடைந்த இருவரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அரக்கோணம் நகர போலீசர் விசாரணை நடத்தி வருகின்றனர்.