சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உடல்நலக்குறைவு காரணமாக பெண் அனுமன் குரங்கு உயிரிழந்தது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் 10 அனுமன் குரங்குகள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கடந்த மாதம் கொண்டு வரப்பட்டன. இதனைத் தொடர்ந்து பூங்காவில் அனைத்து அனுமன் குரங்குகளுக்கும் தனி தனி கூண்டுகள் அமைத்து, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் அனுமன் குரங்குகளுக்கு உணவு அளிக்கும் போது, இரண்டு அனுமன் குரங்கு கூண்டிலிருந்து தப்பி ஓடியது.
இதையடுத்து கடந்த ஐந்து நாட்களாக வன அலுவலர்கள் பூங்கா ஊழியர்கள் குரங்குகளை தீவிரமாக தேடி மயக்கம் ஊசி செலுத்தி பிடித்தனர். அதன் பின் இரண்டு அனுமன் குரங்குகளையும் பாதுகாப்பாக வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குக் கொண்டு வந்து, விலங்குகள் புனர்வாழ்வு மையத்தில் தனியாக ஒரு கூண்டில் அடைத்து, பூங்கா மருத்துவர்கள் அதற்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளைச் செய்து, தீவிரமாக கண்காணித்து பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த அனுமன் குரங்குகளில் பெண் அனுமன் குரங்கு ஒன்றுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அந்தப் பெண் அனுமன் குரங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று (பிப்.22) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கடந்த 21 ஆம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்காவில் 21 வயது ஆண் வங்க புலி, வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்குக் கூட்டம் கூட்டமாகப் படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்!