ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகளுக்குத் தீவனம் மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் வாடிக்கையாகி உள்ளது.
இந்நிலையில், கடம்பூர் மலைப்பகுதி எக்கத்தூர் வனப்பகுதியில், வனத்துறையினர் இன்று ரோந்து சென்றபோது வயது முதிர்ந்த பெண் யானை உடல் நலம் குன்றிய நிலையில், எழுந்திருக்க முடியாமல் படுத்துக் கிடப்பதைக் கண்டனர்.
இதுகுறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் உதவி கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் உதவியோடு உடல் நலம் குன்றிய பெண் யானைக்குச் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாகப் பெண் யானை உடல் நலம் குன்றியுள்ளதாகவும், தற்போது அதன் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ரேஷன் பொருட்களைப் பொட்டலமாக வழங்க வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! - Ration Employees Protest In Salem