கோயம்புத்தூர்: கோடை வெயிலின் தாக்கத்தால் பல்வேறு வனப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வன விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் நிகழ்வு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கோவையை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு வருகிறது. தற்போது, பொள்ளாச்சி அடுத்த ஆனைக்கட்டி மற்றும் தடாகம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கோவை வனத்துறையினர் மாங்கரை பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மாங்கரை ஓடைப் பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதைப் பார்த்துள்ளனர். பின்னர், இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், வனச்சரகர் திருமுகன் மற்றும் வனக் கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். அதில், உயிரிழந்தது 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, உயிரிழந்த யானையின் உடலை மருத்துவக் குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். அதில், யானை நுரையீரல் நோயால் பாதிப்படைந்தது தெரியவந்துள்ளது. மேலும், இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "உயிரிழந்த யானையின் உடலை வனத்துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர்.
யானையின் நுரையீரலில் பாதிப்பால், அதன் மற்ற உள் உறுப்புகளும் பாதிப்படைந்ததில் யானை உயிரிழந்துள்ளது. மேலும், யானையின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவிற்கு பிறகு தான் யானையின் உயிரிழப்பிற்கு வேறு ஏதேனும் காரணமா உள்ளதா என்பது தெரியவரும்" எனக் கூறினர்.
முன்னதாக, இன்று அதிகாலை போத்தனூர் அருகே, கேரள மாநில எல்லைப் பகுதியான வாளையாறு அருகே பெண் யானை ஒன்று ரயில் பாதையைக் கடக்க முயன்ற போது, பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயில் மோதி உயிரிழந்த நிலையில், தற்போது மற்றொரு யானை இறந்த நிலையில் காணப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரயில் ஓட்டுனரின் அலட்சியமா? பாலக்காடு அருகே ரயில் மோதி யானை உயிரிழப்பு!