சென்னை: பெண் காவலர்களை இழிவாகப் பேசியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சவுக்கு சங்கரின் பேட்டிகளை ஒளிபரப்பிய தனியார் யூடியூப் சேனலின் நிறுவனச் செயல் அதிகாரி பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டு, அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஜேன் பெலிக்ஸ், முதலமைச்சரின் தனிப் பிரிவில் தனது கணவர் மீதான குற்ற வழக்குகளை திரும்பப் பெறக் கோரி மனு அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஜேன் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் மனு அளிக்க வந்திருந்தேன். அங்கிருந்த அதிகாரி இதனை நிச்சயமாக முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தார். ஒரு சராசரி மனைவி ஒரு கணவரை மீட்டு வர எப்படி ஆசைப்படுவார்களோ, அதே போன்றுதான் நானும் ஆசைப்படுகிறேன்.
மேலும், எங்களது வழக்கறிஞர்களிடம் எனது கணவர் மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிடக் கூறியிருந்தார், அதன்படி, ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளோம். குறிப்பாக, ஏப்ரல் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட வீடியோவை நாங்கள் தற்போது வேறு யாரும் பார்க்காத வண்ணம் (பிரைவேட்) செய்துள்ளோம்" எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, பேசிய பெலிக்ஸ் ஜெரால்டின் வழக்கறிஞர் ஜான்சன், "கடந்த 10ஆம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்ட பெலிக்ஸை பிடிவாரண்ட் இல்லாமலும், எந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமலும், நேரடியாக 13ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதில் சட்ட ரீதியாக தவறு நடந்துள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நடைபெற்ற சோதனையில், வழக்கோடு தொடர்புடைய மின்னணுப் பொருட்கள் மட்டுமே கைப்பற்றப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால், சொத்துக்களின் அசல் ஆவணங்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியுள்ளனர். மேலும், அவரது வீட்டின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் கருணை கொண்டு வழக்கை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
இந்நிலையில், பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி வெளியிட்ட மன்னிப்பு கோரிய வீடியோவில், “கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி சவுக்கு சங்கருடன் எடுக்கப்பட்ட நேர்காணலில் பெண் காவலர்களைக் குறித்து இழிவாகப் பேசினார். அதனை எங்கள் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்தோம்.
அதற்கு பலதரப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை அடுத்து, அந்த வீடியோவை பொதுமக்கள் யாரும் பார்க்காத வகையில், பிரைவட் செய்துவிட்டோம். மேலும், ஒட்டுமொத்த தமிழகப் பெண் காவலர்களிடம் பெலிக்ஸ் ஜெரால்டு சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ஜெயக்குமார் வழக்கில் களமிறங்கும் 'எக்ஸ்பர்ட்'... யார் இந்த சாகுல் ஹமீது?