திருச்சி: தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை தேனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவர் குண்டர் சட்டத்தில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுக்கு சங்கர் நேர்காணலை ஒளிபரப்பு செய்த ரெட்பிக்ஸ் ஆசிரியர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான போலீசார் டெல்லியில் பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்தனர். தொடர்ந்து அவரை திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்பு ஆஜர்படுத்தினர். அதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, மே27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று பெலிக்ஸ் ஜெரால்டை விசாரணைக்காக போலீசார், திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் மனுத்தாக்கல் செய்தனர்.
காவல்துறை தரப்பில் 7 நாள் கஸ்டடி கேட்கப்பட்ட நிலையில், நீதிபதி ஒரு நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். மீண்டும் இன்று மாலை 3 மணி அளவில் ஜெரால்டை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். அந்த வகையில், ஒரு நாள் விசாரணை முடிந்த பின்னர், இன்று மதியம் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்த பின்னர் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
நீதிபதியிடம் காவல்துறை விசாரணையில் இருந்த பொழுது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக இரு தரப்பினரும் தெரிவித்தனர். இதனையடுத்து ஏற்கனவே 27ஆம் தேதி வரை விதிக்கப்பட்ட நீதிமன்ற காவலின்படி அவர் திருச்சி மத்தியச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பெலிக்ஸ் ஜெரால்டின் வழக்கறிஞர் கென்னடி, “நேற்று காவல்துறையில் கஸ்டடி எடுக்கும் போது அவருடைய பாதுகாப்பு மிக முக்கியம் என கோரிக்கை வைத்திருந்தோம். அவரை மூன்றாம் தர மனிதராக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது என கோரிக்கை வைத்திருந்தோம்.
மேலும், அவரது பாதுகாப்பை விசாரணை அதிகாரி உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தோம். அதன்படி எந்தவிதமான துன்புறுத்தல் இல்லாமல் இன்று மருத்துவ சான்றிதழ் உடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகத் தெரிவித்துள்ளோம். விசாரணைக்கு கைது செய்தனர். அதற்கான விசாரணையும் மேற்கொண்டனர். எனவே விசாரணை முடிந்து விட்டது என்று தான் அர்த்தம்.
எனவே, ஜாமீன் கொடுப்பதற்கான எந்த நிபந்தனையும் இருக்காது. ஜாமீன் தொடர்பான மனு நாளை நீதிமன்றத்திற்கு வரவுள்ளது. அவருடைய வீட்டுப் பத்திரங்களை போலீசார் எடுத்து வந்திருக்கிறார்கள். அதற்கான மனுவை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம்.
வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஒளிபரப்பு கருவிகளை மட்டும் தான் கேட்டிருந்தனர். அதற்கு மாறாக இதை செய்துள்ளனர். நாளை இதற்கான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரே பள்ளியைச் சேர்ந்த 7 ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு.. திடுக்கிடும் தகவல்! - Pocso